வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் பகுதியில் தொடர்ந்து பைக் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் சேண்பாக்கம் தகு சந்திர சேகரன் தெருவில் ராயல் என்ஃபீல்ட் வண்டி நேற்று முன்தினம் திருடுபோனது.
இந்த நிலையில் அதே சேண்ப்பாக்கம் நேதாஜி ரோட்டில் இன்று அதிகாலை 2 மணியளவில் கடைகளை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், ராஜி சேட் என்பவரது வீட்டில் புகுந்து அங்கிருந்த பைக்கை திருட முயற்சித்துள்ளார். அப்போது அவரது மனைவி இதனைக் கவனித்து அவரைத் துரத்தியபோது தப்பியோடியுள்ளார்.
இந்நிலையில் சேண்பாக்கம் பகுதியில் திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது இரண்டு வீடியோக்கள் வெளியாகி உள்ளன. அதில் ஒன்றில் கருப்பு சட்டை அணிந்த நபர் ஒருவர் முகத்தில் கைக்குட்டை கட்டிக்கொண்டு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராயல் என்ஃபீல்டு புல்லட் வண்டியை திருடிச் செல்வது போன்று காட்சிகள் பதிவாகியுள்ளன.
மற்றொரு வீடியோவில் வெள்ளை சட்டை அணிந்த திருடன் அங்குமிங்கும் நோட்டமிட்டு ஒரு வீட்டுக்குள் நுழையும்போது, வீட்டில் இருந்தவர்கள் கவனித்து அவனைத் துரத்தும் போது அங்கிருந்து தப்பி ஓடுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை வைத்து வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் நிலைய அதிகாரிகள் கூறுகையில், சேண்பாக்கம் பகுதியில் நடைபெறும் திருட்டு சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது வெளியாகி உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் இரண்டு வீடியோவும் ஒரே சம்பவமா? ஒரே இடத்தில் நடைபெற்றதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
பைக் திருட்டில் ஈடுபடும் கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி சேண்பாக்கம் பகுதியில் இதுபோன்று தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். எனவே அங்கு காவல்துறையினரின் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சக மாநிலத்தவரைக் கொலை செய்த இளைஞர் கைது!