ராமநாதபுரம் மாவட்டம் திருநகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் விஜயசாமி என்பவரின் மூத்த மகன் மணிகண்டன் (36). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார் சிறுவயதில் கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட சிறு விபத்தில் தன் இடது காலை இழக்க நேர்ந்து.
தொடர்ந்து, கல்வி பயில நாள்தோறும் மிதிவண்டியை ஒற்றை காலில் மிதித்துக்கொண்டே 10 கி.மீ பயணம் செய்து பள்ளிக்குச் சென்று வந்தார்.
இந்நிலையில், மணிகண்டன் நாள்தோறும் மிதிவண்டியை ஒற்றைக் காலில் மிதித்துச் செல்லுவதை அப்பகுதி மக்கள் மிகுந்த ஆச்சிரியத்துடன் கண்டு வந்துள்ளனர்.
நாள்தோறும் தன் அன்றாட வாழ்வில் சிரமப்பட்டு கொண்டிருந்தபோது, வாழ்வில் ஏதேனும் ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மணிகண்டனின் மனதில் ஆழமாய் பதிந்துவிட்டது. அப்போது, தான் ஒற்றை காலில் மிதிவண்டி மிதிப்பதை மற்றவர்கள் ஆச்சரியபடுவதை வைத்து நாட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.
இதனைத் தொடர்ந்து, தன் முதல் பயணத்தை ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் உதவியுடன் தலை கவச விழிப்புணர்வு மிதிவண்டி பயணத்தை 2008ஆம் ஆண்டு சிவகங்கை முதல் சென்னை வரை வெற்றிகரமாக முடித்தார். 2010ஆம் ஆண்டு தன் மாமன் மகள் தாமரைச்செல்வி என்பவரை மணமுடித்து, இவர்களுக்கு தற்போது விஜய சௌந்தர்யா (7). விஜய ஷாலினி (1) என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
பின்னர் 2013 ஆம் ஆண்டு சாலை விதிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மற்றொரு மிதிவண்டி பயணத்தை ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை மேற்கொண்டார். இவரது பயணத்திற்கு உறுதுணையாக பெற்றோர், உறவினர்கள் இருந்தாலும் மனைவி தாமரைச்செல்விக்கு சற்று மனக்கசப்பாகவே இருந்துள்ளது.