வேலூர் சத்துவாசாரி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு எதிர்புறம் உள்ள தேசிய நெடுஞ்சாலையை பொதுமக்கள் கடக்கும் போது, எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்பட்டு அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதை தடுக்கும் வகையில், அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தலைமையில் இன்று (நவ. 11) பூமி பூஜை நடத்தப்பட்டது. அதில், வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
சத்துவாசாரி சுரங்க வழி பாதைக்கு பூமி பூஜை - ஆட்சியர் தொடக்கி வைப்பு
வேலூர்: சத்துவாசாரி வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே அமைய உள்ள சுரங்க வழி பாதைக்கு பூமி பூஜை செய்து வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரம் தொடக்கி வைத்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் சண்முக சுந்தரம், சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறும் இடத்தில் அதிகம் விபத்து ஏற்படுவதாகவும், இதன் காரணமாகவே சுரங்கப் பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். பாதசாரிகள் மட்டும் நடந்துச் செல்லும் வகையில் 5.05 மீட்டர் உயரமும் 2.6 மீட்டர் அகலத்துடன் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்த அவர், ரூ. 6 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை ஆறு மாத்ததில் முடிக்க திட்டமிட்டிருப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய ஆட்சியர், வேலூர் கடை வீதிகளில் தீபாவளி சிறப்பு வியாபாரம் நடைபெற்று வருவதால் தகுந்த இடைவெளி என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளதாகவும், பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கூட்டத்தை கட்டுப்படுத்த வருவாய்துறை அலுவலர்கள், காவல்துறையினர் அடங்கிய சிறப்பு அணியினர் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், நோய் கட்டுப்பாடு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.