கரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021ஆம் ஆண்டில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலின் போது கரோனா தொற்று அதிகரித்து விடக்கூடாது என்ற நோக்கில் இந்திய தேர்தல் ஆணையம் தொற்று பரவாத வகையில் தேர்தல் நடத்த சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
ஒரு வாக்குச்சாவடியில் 1,000 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால்அதனை இரண்டாக பிரித்து துணை வாக்குச்சாவடிகள் (Auxiliary Polling Station) அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வேலுர் மாவட்டத்தின் ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 1,301 வாகுச்சாவடிகளில், 1000 வாக்களர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச் சாவடிகளை இரண்டாகப் பிரித்துகூடுதலாக 562 துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பழுதடைந்த கட்டடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது தொடர்பான உத்தரவின் அடிப்படையில் 40 வாக்குச்சாவடிகள் இடமாற்றமும், வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகளின் பெயர் மாற்றப்பட்டதன் அடிப்படையில் ஆறு வாக்குச்சாவடிகளில் பெயர் மாற்றமும் செய்யப்பட்டுள்ளன.