மணல் கொள்ளையை தடுக்க சென்ற ஆய்வாளர் மீது தாக்குதல் வேலூர்: குடியாத்தம் அருகே மணல் கொள்ளையை தடுக்க சென்ற தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கியதாகவும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை ஒப்படைக்கக் கோரியும் இரவு நேரத்தில் கிராமத்திற்குள் குவிந்த போலீசாரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த, சின்ன தொட்டலாம் கிராமத்தில் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக, மேல்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மணவாளன் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மணவாளன், இரவு நேரத்தில் அந்த கிராமத்தில் சோதனையை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. அப்போது வினித் மற்றும் ராஜசேகர் என்பவர் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்ததாகவும், அவர்களை தனி பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:செய்யாத தவறுக்காக எந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டோம்: வேலூர் சரக டிஐஜி முத்துசாமி உறுதி
இதனையடுத்து, மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த இருவரும் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மணவாளனை தாக்கி, அவர் மீது மாட்டு வண்டியை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து, தகவல் அறிந்து குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையில் ஏராளமான போலீசார் இரவு நேரத்தில் கிராமத்தில் குவிந்தனர்.
கிராமத்திற்குள் போலீசார் குவிந்ததால் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது. இது சம்பந்தமாக கிராம மக்கள் கூறுகையில், கிராமத்தில் உள்ள கோயில் கட்டிட வேலைக்காக அனுமதியுடன் ஆற்றில் மணல் எடுத்ததாக தெரிவித்து உள்ளனர்.
அதேநேரம், வண்டி மற்றும் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் வரவில்லை என்றால்.. என மிரட்டல் பாணியில் போலீசார் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இரவு நேரத்தில் 10க்கும் மேற்பட்ட போலீசார் ஊருக்குள் புகுந்ததால் கிராம மக்கள் பதற்றத்தில் உள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க:மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தையை கடத்த முயன்ற மர்ம நபர்.. சிசிடிவி காட்சிகள்..!