தமிழ்நாட்டில் பல்வேறு பண்டிகைகள் வந்தாலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று பொங்கல் திருநாள். இந்த பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பொங்கல் வைக்க பயன்படுத்தும் மண்பானை தயாரிக்கும் பணி, வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன.
இவர்கள் முதலில் பானைகள் செய்வதற்கு முறையாக மண்ணை குழைத்து பக்குவப்படுத்துகின்றனர். பின்னர் பழைய முறைப்படி சக்கரத்தின் உதவியோடும் தற்போதைய நவீன இயந்திரத்தின் உதவியோடும் மண்பானைகளை தயார் செய்கின்றனர். அதுமட்டுமல்லாமல் மண் அடுப்புகள் தயாரிக்கும் பணியும் இங்கு நடைபெறுகிறது.
இந்தத் தொழில் குறித்து பார்வையற்ற மண்பாண்ட தொழிலாளி உமாபதி கூறுகையில், பல வருடங்களாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கடந்த 13 வருடங்களாக தனக்கு கண் பார்வை போய்விட்டது என்றும் இருப்பினும் தொடர்ந்து மண்பானைகள் மற்றும் மண் அடுப்புகள் செய்து வருவதாகவும் தற்போது பொங்கல் விற்பனை மந்தமாகவே இருப்பதாகவும் தெரிவித்தார்.
நாகரிக வளர்ச்சியால் நலிவடைந்து வரும் இந்தத் தொழிலுக்கு மூலதனமாக இருக்கின்ற மண்ணுக்கே திண்டாடுவதாக தெரிவிக்கும் தொழிலாளிகள், காலங்காலம் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வந்தாலும் தங்களுக்கு எந்த லாபமும் கிடைப்பதில்லை என்று வருந்துகின்றனர். அழிவின் விளிம்பில் இருக்கும் இந்தத் தொழிலை பாதுகாக்க வேண்டுமென்றும் செய்கூலிக்கு தகுந்த விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.