வேலூர்: அசாம் மாநில அரசு சார்பில் அம்மாநில நோயாளிகள், மாணவர்கள், பொதுமக்கள் பயன் பெறும் வகையில், வேலூர் சத்துவாச்சாரியில் “அசாம் பவன்” என்ற தங்கும் விடுதி ரூ.23 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. 4 ஆயிரத்து 340 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் அமைந்துள்ள இந்த விடுதி கட்டடத்தில் பல்வேறு நவீன வசதிகள் இடம் பெற்றுள்ளன.
அந்த வகையில், இந்த விடுதி கட்டடத்தை அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று (செப்.26) திறந்து வைத்து, மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், “அசாம் மாநிலத்தில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் பல்வேறு வசதிகள் இருந்தாலும், எங்கள் மாநில மக்கள் வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காகவும், கல்லூரிகளில் பயில்வதற்காகவும் வேலூருக்குத்தான் வருகின்றனர்.
அவர்களின் நலனுக்காக வேலூரில் தங்கும் மையம் கட்டப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை, மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் 10 தலைநகரங்களிலும் அசாம் மாநில நோயாளிகள், மாணவர்கள் பயன் பெறும் வகையில் தங்கும் மையங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த தங்கும் மையங்கள் கல்விக்காகவும், சிகிச்சைக்காகவும் வருவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.