வேலூர்: அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (நவ.13) நேரில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் பேடி, அங்குள்ள அவசரக்கால விபத்து சிகிச்சைப் பிரிவு, காய்ச்சல் பிரிவு, பொது சிகிச்சைப் பிரிவு மையம், சலவைக் கூடம் ஆகியவற்றைப் பார்வையிட்டார். மேலும், நோயாளிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் “வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை கருவூட்டல் மையம் அமைப்பதற்கான ஆலோசனையில் அரசு ஈடுபட்டு வருகிறது. தனியார் செயற்கை கருவூட்டல் மையங்களில் அரசின் விதிமுறைப்படி செயல்படாத மையங்கள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தவறு செய்யும் மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், தீக்காயத்துடன் வந்த சிறுமிக்கு அங்குள்ள மருத்துவமனை பாதுகாவலர்கள் சிகிச்சை அளித்தது தொடர்பான புகார் குறித்து, மாவட்ட ஆட்சியரின் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணையில், மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியில் இல்லை என்பது தெரியவந்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது இந்தாண்டு தீக்காயங்கள் தொடர்பான பாதிப்பு குறைந்துள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால், தீக்காயங்களின் அளவும் குறைந்து உள்ளது.