வேலூர்:கணியம்பாடி ஒன்றியம் ஆற்காட்டான்குடிசை கிராமத்தில் எருதுவிடும் விழா நேற்று (பிப்.14) வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் மொத்தம் 174 காளைகள் பங்கேற்றன. அதேநேரம் புலிமேடு கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷ்குமார் (28) என்பவர், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவர், ஆற்காட்டான்குடிசையில் நடைபெற்ற எருதுவிடும் விழாவைக் காணச் சென்றிருந்தார்.
இந்த நிலையில், அங்கு விழாவில் விடுவதற்காக அவரது நண்பர் ஒருவரின் காளையைப் பிடித்தபடி சுரேஷ்குமார் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த காளை மிரண்டு, சுரேஷ்குமாரின் வயிற்றில் முட்டியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சுரேஷ்குமாரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சுரேஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வேலூர் கிராமிய காவல் துறையினர், சுரேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.