வேலூர் மாவட்டம் அரக்கோணம் மக்களவை தொகுதிக்குட்பட்ட கீழ்விஷாரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் இன்று மாலை வரை வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று மாலை 5 மணியளவில் பாமக முன்னாள் மத்திய அமைச்சர் வேலு மற்றும் முன்னாள் எம்எல்ஏ இளவழகன் ஆகியோர் வாக்குச்சாவடியை ஆய்வு செய்வதற்காக அங்கு சென்றனர். அப்போது, அங்கிருந்த காவல்துறையினர் கூட்டமாக செல்ல அனுமதி இல்லை, நீங்கள் இந்த வழியாக செல்ல வேண்டாம் என எச்சரித்தனர். அதற்கு நாங்கள் கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்ய உள்ளோம் என பாமக தொண்டர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்எல்ஏவை அனுமதிக்காததை கண்டித்து இந்த பகுதியில் உள்ள பாமக நிர்வாகிகள் தொண்டர்கள வாக்குச்சாவடிக்குள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கூட்டத்தை கலைந்து செல்லும்படி காவல்துறையினர் எச்சரித்தும் யாரும் கலைந்து செல்லாததால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. துப்பாக்கிச் சூடு சத்தத்தை கேட்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு பெரும் பரபரப்பு நீடித்ததையடுத்து கட்சி நிர்வாகிகளும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவழியாக போலீசார் கட்சி நிர்வாகிகளை சமாதானம் செய்து கூட்டத்தை கலைத்தனர்.