Vao Gets Bribe and arrest வேலூர்:வேலூர் மாவட்டத்தில் வீட்டுமனை பட்டா மாற்ற 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கிராம நிர்வாக அலுவலர் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். குடியாத்தம் அடுத்த அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள மேகநாதன் என்பவர் வீட்டுமனை பட்டா மாற்றுவதற்காக கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்து உள்ளார்.
பட்டா மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகன் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் தேன்மொழி ஆகிய இருவரும் மேகநாதனிடம் லஞ்சமாக 10 ஆயிரம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. இதன் பேரில் மேகநாதன் வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சங்கரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேகநாதனிடம் ரசாயனம் பூசிய 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து அங்கு மறைந்து இருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் தேன்மொழி ஆகிய இருவரும் பணத்தை பெற்றுக் கொள்ளும்போது கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் அவர்களை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டுமனை பட்டா மாற்றுவதற்காக ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கி, லஞ்ச ஒழிப்புத்துறையினால் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: திருமண விருந்தில் தீ விபத்து! 100 பேர் பலி! ஈராக்கை உலுக்கிய கோர சம்பவம்!