தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஷ்மீராக மாறும் தமிழ்நாடு என மாரிதாஸ் பேசியது தவறே கிடையாது - அண்ணாமலை - annamalai press meet at vellore

'ஒரு பஞ்சாயத்தில் 80 விழுக்காடு திட்டங்கள் மத்திய அரசினுடையதுதான். இதை நிச்சயமாக மாநில அரசு ஒப்புக்கொள்ளும்' என்று தெரிவித்த அண்ணாமலை மாரிதாஸின் கருத்துச் சுதந்திரம் குறித்தும் பேசியுள்ளார்.

”தமிழ்த்தாய் வாழ்த்தை மாநிலப் பாடலாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்..!” : அண்ணாமலை
”தமிழ்த்தாய் வாழ்த்தை மாநிலப் பாடலாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்..!” : அண்ணாமலை

By

Published : Dec 18, 2021, 6:31 AM IST

Updated : Dec 18, 2021, 6:47 AM IST

வேலூர்:வேலூரில் செய்தியாளரை இன்று (டிசம்பர் 17) சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், ”இந்தியாவில் தடுப்பூசித் தட்டுப்பாடு இல்லை. போதுமான அளவுக்கு மேல் இருப்பு உள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பவர்களையும் தடுப்பூசி செலுத்தவைக்க தமிழ்நாடு அரசு முயற்சிக்க வேண்டும்.

மாநில அரசுடன் இணைந்து தடுப்பூசி செலுத்துவதைத் துரிதப்படுத்த அனைத்துக் கட்சிகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும், தடுப்பூசி செலுத்திக்கொண்டதைத் தெரிவிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி ஒரு திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறோம்.

அம்பேத்கர் வரலாற்றை முழுமையாகப் படிக்க வேண்டும்

வீடுதோறும் சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, வீட்டின் முன்பு தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா, இல்லையா? என்பது குறித்து ஸ்டிக்கர் ஒட்டப்படும். அந்தப் பணியை தமிழ்நாட்டிலும் தொடங்கியிருக்கிறோம். 60 ஆயிரம் களப்பணியாளர்கள், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் விவரங்களைச் சேகரித்துவருகிறார்கள்.

அதன் பின்னர், மாநில அரசுக்கு தெரிவித்து தன்னார்வலர்கள் மூலம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களின் வீடுகளுக்கே, சுகாதாரப் பணியாளர்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி விவகாரத்தைப் பொறுத்தவரை குறை சொல்வதைவிட அதைச் சரிசெய்ய வேண்டிய கட்சியாக பாஜக இருக்கிறது” என்றார்.

மேலும் அவர், ”அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை முழுமையாகப் படித்துவிட்டு விவாதத்திற்கு திருமாவளவன் வரட்டும். நான் எங்களுடைய தலைவர்களை அனுப்பிவைக்கிறேன். அம்பேத்கரின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை விவாதம் செய்ய வேண்டும்.

80% திட்டங்கள் மத்திய அரசினுடையது

அம்பேத்கருக்கு காங்கிரஸ் எதிர்ப்பு எவ்வாறு இருந்தது, தேர்தலில் அம்பேத்கரை காங்கிரஸ் திட்டமிட்டு எப்படி தோற்கடித்தார்கள், அம்பேத்கருடைய கொள்கை என்ன, பாஜக கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவரை குடியரசுத் தலைவராக நியமித்தார்கள், ஒருவர் ஒரு கட்சியை ஆரம்பித்துவிட்டு நான்தான் அந்த சமூகம் என்று பேசக்கூடாது.

கிராமப்புறங்களில் சாலை போடுவது, வீடு கட்டிக் கொடுப்பது, மருத்துவக் காப்பீடு எனப் பலவும் பிரதமரின் திட்டம். ஒரு பஞ்சாயத்தில் 80 விழுக்காடு திட்டங்கள் மத்திய அரசினுடையதுதான். இதை நிச்சயமாக மாநில அரசு ஒப்புக்கொள்ளும். 100 விழுக்காடு தடுப்பூசி இலவசமாக, தொடர்ச்சியாக வழங்கிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.

மத்திய மாநில அரசு திட்டம் என்று சொன்னால்கூட சந்தோஷம்தான். திட்ட உரைகளில் முதலமைச்சரின் படமும், பிரதமரின் படமும் போட வேண்டும். இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கக் கூடாது. பிரதமரின் படத்தை மட்டும் போடுங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை" என்றார்.

மாரிதாஸ் பேசியதில் தவறு கிடையாது

"தமிழ்நாடு காஷ்மீராக மாறிக்கொண்டிருக்கிறது என்று மாரிதாஸ் பேசியது தவறே கிடையாது, அது கருத்துச் சுதந்திரம். அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் தனிமனித விருப்பம். இதை நீதியரசர் உத்தரவில் தெளிவாகக் கூறி இருக்கிறார்” என்று மாரிதாஸ் குறித்த கேள்விக்குப் பதிலளித்தார்.


உத்தரப் பிரதேசத் தேர்தல் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, "எழுதி வைத்துக்கொள்ளுங்கள். உத்தரப் பிரதேச தேர்தலில் கடந்த முறை 303 இடங்களில் வெற்றிபெற்றோம். இந்த முறை 303 இடங்களுக்கு மேல் வெற்றிபெறுவோம்.

நாடாளுமன்றத்தில் 2019ஆம் ஆண்டு 300ஐ தாண்டி எம்பிக்கள் இருந்தார்கள். இந்தமுறை 400-க்கு மேல் இருக்கும். பாரதிய ஜனதா கட்சி டெல்லியில் 40 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கத்தான் போகிறது" எனப் பதிலளித்தார்.

மேலும், ”தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ மாநிலப் பாடலாக அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். ஆனால், முழு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இருக்க வேண்டுமென பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்துகிறது” என்றும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க:'பிரதமர் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்'

Last Updated : Dec 18, 2021, 6:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details