வேலூர்:சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான கருத்தரங்கம், வேலூர் தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை வகித்து பேசினார். மேலும் இக்கூட்டத்தில், முன்னாள் மத்திய இணை அமைச்சர்கள் ஆர்.வேலு, என்.டி.சண்முகம், பாமக மாவட்டச் செயலர் இளவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “தமிழ்நாட்டில் சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்திட, 44 ஆண்டுகளுக்கு முன்பே முதன் முதலில் குரல் கொடுத்தவர், ராமதாஸ். ஆனால், 1931ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் நடத்தப்பட்டதற்கு பிறகு, இக்கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் என்றால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டியது அவசியமாகும்.
தமிழகத்தில் உள்ள 2.3 கோடி குடும்பங்களின் சமூக பொருளாதார நிலையை அறிந்தால் மட்டுமே, அதற்கேற்ப அவர்களுக்கான திட்டங்கள், சலுகைகள், பங்கீடுகள் அளித்திட முடியும். அதன் மூலமாகத்தான், தமிழகத்தை முன்னேற்ற முடியும். இல்லையெனில், எத்தகைய தொழில் முதலீடுகள், தொழில்பேட்டைகள் வந்தாலும் தமிழகத்தை முன்னேற்ற முடியாது.
இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது மதம், மாநிலம், மொழி என வேறு எந்த அடிப்படையிலும் இல்லாமல், சாதியின் அடிப்படையிலேயே அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீடும் 1931ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையில்தான் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இத்தனை ஆண்டுகள் இடைவெளியில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சில சாதிகளில் மக்களின் தொகை அதிகரித்தும், சில சாதிகளில் ஒருநபர் கூட இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் மக்களின் உண்மையான நிலை என்ன என்பதை அறிந்திட முடியும். சமூகநீதியை நிலை நாட்டிட வேண்டும் என்றால், அதற்கு தெளிவான கணக்குகள் அவசியமாகிறது. இதனை தெரிந்த போதிலும், தமிழக முதலமைச்சர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தயக்கம் காட்டி வருகிறார்.
மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறுகிறார். பீகார், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் அதிகாரம் இல்லை எனக் கூறுவது, மக்களை ஏமாற்றும் செயலாகும். தமிழ்நாடு முன்னேற வேண்டும் என்றால், உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும்.