வேலூர்:அயோத்தியில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி 2 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது இந்தியா முழுவதும் பல வழித்தடங்களில் இயங்கி வருகிறது. அதே நேரத்தில் அம்ரித் பாரத் என்பது சாமானியர்களின் வசதிகள் மற்றும் பயணத் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே துறையினால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு புதிய ரயிலாகும்.
அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், புதிய (push pull) தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, முன்புறம் உள்ள என்ஜின் ரயிலை முன்னோக்கி இழுக்கும் வேளையில், பின்புறம் உள்ள என்ஜின் ரயிலை முன்னோக்கி தள்ளும். இதனால், குறைந்த நேரத்திலே அம்ரித் பாரத் ரயில் வேகம் எடுத்துவிடும்.
5 மாநிலங்களை இணைக்கும் வகையில், மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களை இணைக்கிறது. இவை 32 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இதனுடைய பயண நேரம் 42 மணி நேரம் ஆகும். இந்த ரயில் மால்டா பகுதியில் இருந்து பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா டவுன் வரை 2 ஆயிரத்து 247 கிலோ மீட்டர் பயணிக்கிறது.