வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சின்னவரிகம் பகுதியில் (ஆம்பூர் ஹூஸ்) என்ற தனியார் காலணி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையின் பின்புறத்தில் காலணிகளுக்கு தேவையான உதிரி பொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்கு ஒன்று உள்ளது. இக்கிடங்கில் சுமார் 5:30 மணியளவில் புகை மூட்டம் வருவதைக் கண்டு சந்தேகமடைந்த காவலாளிகள் விரைந்து சென்று பார்த்த போது சேமிப்பு கிடங்கில் தீ பற்றி இருப்பது தெரியவந்தது.
இதனால் பீதியடைந்த காவலாளிகள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆனால், அதற்குள் தீ மளமளவென கிடங்கு முழுவதும் பரவியது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் இரண்டரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.