வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள வடபுதுப்பட்டு கிராமத்தில் 1961ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜர் அவர்களால் தொடங்கப்பட்ட ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொடர்ந்து இயங்கி வருகிறது. இங்கு ஆரம்ப காலத்தில் சுமார் 1,500 ஊழியர்கள் பணிபுரிந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து 250 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் பருவகாலத்தில் அதிகளவு கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டதால், கரும்புகளை அரவைச் செய்ய போதியளவு ஊழியர்கள் பற்றாக்குறை நிலவியது. இதை சமாளிக்கும் விதமாக ஆலை நிர்வாகம் தற்காலிக ஊழியர்களை பணியமர்த்தியது. தொடர்ந்து ஆலைக்கு கரும்பு வந்ததால் தற்காலிக ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்படாமல், ஆலை நிர்வாகம் தொடர்ந்து பணி வழங்கி வந்தது. தற்போது கரும்பு வரத்து குறைந்துள்ளதால், ஊதிய செலவைக் குறைக்கும் வகையில் பருவக்காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.