வேலூர்: வள்ளிமலை அரசுப்பள்ளி வளாகத்தில் மணலை பதுக்கி வைத்து விற்பனை செய்ய பள்ளி மைதானத்தை மணல் கொட்டும் இடமாக சமூக விரோதிகள் மாற்றி இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் பெரிதானதைத்தொடர்ந்து காட்பாடி வட்டாட்சியர் மணலை பொது ஏலம் விட்டு, அதனை அரசு கணக்கில் செலுத்துமாறு மேல்பாடி வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமாருக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் தரப்பில் பள்ளி வளாகத்தில் 15 யூனிட் இருந்ததாகவும், அதனை ரூபாய் 38 ஆயிரத்து 250 ரூபாய்க்கு பொது ஏலம் விடப்பட்டு அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த விவகாரத்தில் அரசுப் பள்ளி வளாகத்தில் சட்ட விரோதமாக பல டன் கணக்கில் மணல் குவித்து வைத்திருந்ததாகவும், மணலைக் குவித்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை முனைப்பு காட்டவில்லை என்றும், டன் கணக்கில் மணல் இருந்தநிலையில் 15 யூனிட் மணல் மட்டுமே இருந்ததாக அளவை குறைத்து காட்டியிருப்பதாகவும் மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.