வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் வழிபாட்டை தடுப்பதா? தொல்லியல் துறை அதிகாரியுடன் இந்து அமைப்பினர் வாக்குவாதம் வேலூர்: வேலூரில் நகரின் மையப்பகுதியில் இந்தியாவின் சுதந்திரத்திற்காக வித்திட்ட கோட்டை உள்ளது. இக்கோட்டை மத்திய அரசின் இந்திய தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் உள்ளது. இதனுள் அமைந்துள்ள ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில், 1981 முதல் சிவலிங்கம் உள்ளிட்ட சிலைகளை வைத்து பொதுமக்கள் தொடர்ந்து வழிபாடுகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இக்கோட்டையின் தொல்பொருள் துறை அதிகாரியாக அகல்யா என்பவர் இருந்து வருகிறார். இவர் கோட்டையை சரியாக பராமரிக்காமலும், சரியாக பணிக்கு வராமலும் உள்ளதாக கூறப்படுகிறது. ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தினுள் நடந்துவரும் வழிபாட்டைத் தடுக்கும் நோக்கில் இவர் ஒருமாதகாலமாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், நேற்று கோட்டையில் இருந்த வழிபாட்டு பொருட்கள் வைக்கும் அறைகளை பூட்டி சாவியை எடுத்து சென்றுவிட்டார். இன்று (நவ.7) மாலை ஆறுமணிக்கே கோட்டையின் பிரதான இரும்பு கதவை பூட்டிவிட்டு தொடர்ந்து அடவாடி செயலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனால், கோயிலுக்குள் இருந்த பக்தர்கள் வெளியே வர முடியாமலும்; கோட்டைக்குள் சாமி கும்பிட வந்தவர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமலும் போனது. இதனைத்தொடர்ந்து, பொதுமக்களும் இந்து முன்னணி அமைப்பினரும் சம்பவ இடத்தில் தொல்பொருள் அதிகாரி அகல்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியப் பின்னர், கோயில் கதவு திறக்கப்பட்டது.
கோயிலில் வழிபாட்டை தடுக்கும் வகையில், முழுவீச்சில் செயல்பட்டு வருவதாக தொல்பொருள் அதிகாரி அகல்யா மீது பொதுமக்கள் குற்றசாட்டியுள்ளனர். அயோத்தி ராமர் கோயிலையே திறக்க வழிமுறையாக இருந்தது, இந்த வேலூர் ஜலகண்டீஸ்வரர் கோயில் வழிமுறைதான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மத்திய அரசு இந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க:"ராமன் கற்பனை தான்" - பெரியாரை மேற்கோள் காட்டிய பீகார் எம்எல்ஏ