வேலூர்:வேலூரின் திருப்பாக்குட்டை பகுதியைச் சேர்ந்த சிறுவன் ருகேஷ் (5). வீட்டில் தனது தாத்தா குடித்து விட்டு மீதம் வைத்திருந்த மதுபானத்தை, குளிர்பானம் என நினைத்து அருந்தியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தான்.
தற்போது இது தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இச்சம்பவம் குழந்தை வளர்ப்பு குறித்து பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில் குழந்தைகள் வளர்ப்பில், பெற்றோர் வீட்டில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கீழே காண்போம்.
பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் பின்வருமாறு:
- ஆபத்தான பொருட்களை குழந்தைகளின் கைக்கு எட்டும்படி வைக்கக் கூடாது. மின்வயர்களோ, எளிதில் தீப்பற்றும் பொருட்களோ, எலி மருந்தோ.... குழந்தைகளுக்கு அருகில் இருக்கவே கூடாது.
- குழந்தைகளின் செயல் அனைத்தும், நமது பிரதிபலிப்பே என்பதனை பெற்றோர் அனைவரும் உணர வேண்டும். ஆகையால், குழந்தைகளின் கண்ணெதிரே புகைப் பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கவழக்கங்களை செய்யக் கூடாது.
- 'தண்டனை தருகிறேன்' எனும் பேர் வழியில், குழந்தையிடம் அன்பாக இல்லாமல் இருப்பதும் தவறுதான்.
- குழந்தைகள் முன்னிலையில் மற்றொரு குழந்தையுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது. அதுபோல், மற்றொரு குழந்தையை ஒப்பிட்டு, தன் குழந்தையைத் தாழ்த்தி மற்றவர்களிடம் பேசக்கூடாது.
- 'உன்னை ஹாஸ்டலில் விட்டுவிடுவேன். உன்னை வேறு யாருக்காவது கொடுத்து விடுவேன்' என பயமுறுத்தக் கூடாது.
- ’தனக்கு உதவி செய்ய யாருமே இல்லை’ என்ற நிலையில் குழந்தை உணரக் கூடாது. அது போன்ற சூழலை குழந்தைக்கு உருவாக்காதீர்கள். குழந்தை சொல்வதை தயவு செய்து காது கொடுத்து கேளுங்கள்.
- தேவையில்லாத காரணங்களுக்காக குழந்தை இன்னொருவரை சார்ந்து இருக்கும்படி வைக்க வேண்டாம்.
- ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ தெரிந்த நபரிடமோ, அதிகம் பழக்கமில்லாத நபரிடமோ போக மறுத்தால், வலுகட்டாயமாக குழந்தையை அவர்களிடம் விட வேண்டாம்.
- குழந்தைகள் தவறு செய்யும்போது தடுக்க வேண்டாம். தவறு செய்யும்போதுதான் அவர்கள் கற்றுக் கொள்வார்கள். தவறு செய்கையில் குழந்தையின் உடலுக்கு ஆபத்து என்றால், மட்டும் தடுத்துவிடுங்கள்.
- குழந்தை கவலையிலேயே இருந்தால், அதைப் பார்த்தும் நீங்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
- குழந்தை மன உளைச்சலில் இருந்தால் நீங்கள் சாக்லேட்டோ, பிஸ்கெட்டோ வாங்கித் தந்து சமாளிக்கக் கூடாது. என்ன பிரச்னை எனக் கேட்டு தீர்த்து வையுங்கள். மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
- குழந்தை தோல்வி அடைந்தால் அவர்களைத் திட்டுவது, அடிப்பது போன்றவற்றை செய்யாதீர்கள். தோல்வியிலிருந்து குழந்தையை மீட்க, அனைத்து முயற்சிகளையும் நீங்கள் நம்பிக்கை வார்த்தைகள் மூலம் செய்யுங்கள்.
- குழந்தைக்கு விருப்பம் இல்லாத வகுப்புகளில் சேர்த்து விட வேண்டாம். கட்டாயப்படுத்தி பாடல் கற்கும் வகுப்பு, நடனம், நீச்சல் என எதையும் வலுக்கட்டாயமாக சேர்க்க வேண்டாம்.
- குழந்தையின் கேள்விகளுக்கு பொறுமையாகவும் விளக்கமாகவும் பதில் அளியுங்கள். கேள்வி கேட்பதற்காக குழந்தையை அடிக்க வேண்டாம்.
மேற்கண்ட வழிமுறைகளை பெற்றோர் கடைப்பிடித்தால் குழந்தைகளின் மன, உடல் நலன் பாதுகாக்கப்படும் என்பதில் ஐயமில்லை.
இதையும் படிங்க:காரை திருட முயன்ற இளைருக்கு உணவு, குடிநீர் வழங்கல்: கோவையில் ருசிகரம்!