தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுடுகாடு செல்லும் வழி ஆக்கிரமிப்பு - சடலத்தை எரியூட்ட அல்லல்படும் மக்கள் - சடலங்கள்

வேலூர்: வாணியம்பாடியில் சுடுகாட்டுக்குச் செல்லும் வழி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பாலத்திலிருந்து கயிறு கட்டி சடலத்தை இறக்கி தகனம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Vaniyambadi

By

Published : Aug 21, 2019, 6:01 PM IST

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாராயணபுரம் கிராமத்தில் ஆதிதிராவிடர் வசிக்கும் காலனி உள்ளது. அப்பகுதி மக்களுக்காக ஊரின் நுழைவுப்பகுதியில் தனியாக ஒரு சுடுகாடும் உள்ளது. ஆனால் அந்த சுடுகாட்டில் போதுமான இடவசதி இல்லாததாலும் ஊருக்கான நுழைவுவாயிலில் அது இருப்பதாலும் உயிரிழந்தவர்களை எரியூட்ட முடியாத நிலை இருந்து வருகிறது.

இதன் காரணமாக அருகில் உள்ள பாலாற்றங்கரையில் இறந்தவர்களின் சடலங்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு ஆற்றைக் கடக்க பாலம் கட்டப்பட்டது. இதன்பின் பாலாற்றின் இருகரையோரங்களிலும் உள்ள விவசாய நில உரிமையாளர்கள் நாளடைவில் பாலாற்றின் கரைகளை ஒட்டி ஆக்கிரமிப்பு செய்து ஆற்றுக்கு செல்லும் வழியை, வேலி அமைத்து அடைத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் நாராயணபுரம் காலனியைச் சேர்ந்தவர்கள் சடலத்தை எடுத்துச்செல்ல வழி இல்லாததாலும், விவசாய நிலங்கள் வழியாக செல்ல சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும்; தொடர்ந்து அங்குள்ள மக்கள் கடும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்தப் பகுதியைச் சேர்ந்த குப்பன் என்பவர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து சடலத்தை எரியூட்டுவதற்காக பாலாற்றங்கரைக்குக் கொண்டு சென்று எரியூட்ட முயன்ற போது, அங்குள்ள ஆக்கிரமிப்பு செய்த நில உரிமையாளர்கள் தங்களின் விளைநிலம் வழியாக சடலத்தைக் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு இரு தரப்பினருக்குமிடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து பாடையில் கயிறு கட்டி பாலத்தின் மேல் இருந்து, இறந்தவரின் உடலை கீழே இறக்கி எரியூட்டியுள்ளனர். இச்சம்பவம் இறந்தவரின் உறவினர்கள் மற்றும் அந்த கிராம மக்களை கொதிப்படையச் செய்துள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அப்பகுதியினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு தங்களது குறைகளை தெரிவித்துள்ளனர். மேலும் பாலாற்றங்கரையில் இருபக்கமும் ஆற்றிற்கு செல்ல வழியின்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதியினை கையகப்படுத்தி அரசு தங்களுடைய ஈமச் சடங்குகளை செய்ய, அப்பகுதி மக்களுக்கு போதிய வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சடலத்தை எரியூட்ட முடியாமல் கிராம மக்கள் அவதி

ஒடுக்கப்பட்ட மனிதன் இருக்கும் போதும் நோகிறான்; இறந்த பின்னும் நோகிறான் என்ற அவல நிலை இந்த சம்பவம் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details