வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டுவருகின்றன.
அந்த வகையில், வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதவனூர் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திண்ணை பரப்புரை மேற்கொண்டார்.
வேலூர் மக்களவை இடைத்தேர்தல் பரப்புரையின்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அப்போது பேசிய அவர், ”இதுவரை எத்தனையோ பொதுத் தேர்தல், இடைத் தேர்தலை சந்தித்துள்ளோம். ஆனால் இப்போதுதான் முதன்முதலாக தடைபட்ட தேர்தலை சந்திக்கின்றோம். வரும் தேர்தலில் பொய் பரப்புரைகளை முறியடிக்கும் வகையில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் சாதி, மதம், இனம் வேறுபாடின்றி உழைக்க வேண்டும்.
திமுகவினர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என கூறிவந்தனர். ஆனால் அது நடைபெறவில்லை. திமுகவினர் மக்களிடையே பொய் பரப்புரையை மேற்கொள்வார்கள். ஏனென்றால் பொய் சொல்வதில் அவர்கள் கின்னஸ் சாதனை படைத்தவர்கள்” என்றார்.