தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கீடு - அமைச்சர் வீரமணி

வேலூர்: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள புதிய நீதிக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

minister veeramani

By

Published : Mar 14, 2019, 5:40 PM IST

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய நீதிக் கட்சி மற்றும் தமாக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 2 தொகுதிகளில், வேலூர் தொகுதி புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.

ஏற்கனவே கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி இருந்தது. அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செங்குட்டுவனிடம், சண்முகம் தோல்வியடைந்தார். எனவே இந்த முறையும் ஏசி சண்முகம் வேலூரில்தான் போட்டியிடுவார் என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்த சூழ்நிலையில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வேலூரில் அமைச்சர் கே சி வீரமணி மற்றும் புதிய நீதிக் கட்சி தலைவர் சண்முகம் கூட்டாக பேட்டி அளித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் கே சி வீரமணி,

அதிமுக கட்சியை எம்ஜிஆர் உருவாக்கியபோது அவருடன் இருந்த ஏ சி சண்முகம் பின்னர் சில காரணங்களுக்காக விலகினார். தற்போது மீண்டும் அவர் கூட்டணி மூலம் தாய் கழகத்திற்கு வந்துள்ளார். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த கட்சியின் தலைவர் என்ற முறையில் ஏ. சி சண்முகம் தற்போது மக்கள் சந்திப்பு மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அவரது கட்சி வேட்பாளர் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். இரட்டை இலை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி போட்டியிடும். எனவே எங்கள் முழு ஆதரவை அவருக்கு தெரிவிக்கிறோம்.

கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஆனால் வேலூரில் தற்போது எம்பியாக இருக்கும் செங்குட்டுவன் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. ஜெயலலிதா அவர் மீது நம்பிக்கை வைத்து அவரை எம்பி ஆக்கினார். ஆனால் அவர் நாளடைவில் கட்சியை விட்டு விலகி சென்றுவிட்டார். தற்போது அவர் தொடர்பில் இல்லை, அவர் எங்கே இருக்கிறார் என்று எங்களுக்கே தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

இதனிடையே கடந்த முறை வேலூர் தொகுதியில் போட்டியிட்ட ஏ. சி சண்முகம் தோல்வி அடைந்தாரே என்று, அமைச்சர் கே. சி வீரமணியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என சிரித்துக்கொண்டே அமைச்சர் வீரமணி பதில் அளித்தார். மேலும் கடந்த முறை தோற்கடிக்கப்பட்டாலும் இந்த முறை அவரை மகத்தான வெற்றி பெற நாங்கள் முழுமையாக ஆதரிப்போம் எனவும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details