தமிழ்நாடு முழுவதும் 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாக்காளர்களைச் சந்தித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டுவருகிறார்.
இதன் ஒரு பகுதியாக இன்று (ஜனவரி 06) வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பரப்புரையில் பேசிய அவர், "காமராஜரைத் தேர்தலில் வெற்றிபெற வைத்த ஊர் குடியாத்தம், நல்லதும் கெட்டதும் தெரிந்த ஊர் என்பதற்கு அதுவே சான்று. இந்த ஊருக்குள் நுழையும்போது நான் பார்த்த காட்சி என் நெஞ்சை இறுக்கமாக்கியது.
ஒரு நதி (கவுண்டன்ய மகாநதி) ஓடிக்கொண்டிருந்த இடம், இன்று வெறும் குப்பை மேடாக இருக்கிறது. இதை எல்லாம் மாற்ற வேண்டும். அதற்கான வாய்ப்பை சரித்திரம் உங்களுக்கு கொடுத்து இருக்கிறது" என்றார்.
இல்லத்தரசிகளுக்கு ஊதிய திட்டம்
தொடர்ந்து பேசிய அவர் ”இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்று கூறினோம், அதனை கிண்டல் செய்கிறார்கள். ஆனால் அது நடந்தே தீரும். அதன் பலனை தாய்மார்கள் அனுபவிக்கத்தான் போகிறார்கள். இளைஞர்களின் வேலை இல்லா திண்டாட்டத்திற்கு ஒரு திட்டத்தை வைத்துள்ளோம்.
படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி அலையும் தொழிலாளர்களாக உங்களை அலையவிடாமல், மற்றவர்களுக்கு வேலைதரக்கூடிய முதலாளிகளாக ஆக்க உங்களுக்கு குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க பயிற்சி மையங்களை அமைக்க இருக்கிறோம்.
குடியாத்தத்தில் கமல்ஹாசன் பரப்புரை விரைவில் குடியாத்தம் போன்ற ஊர்கள் பெரு நகரங்களுக்கு நிகரான அதி நவீன கருவிகளைப் பெற வேண்டும். அதற்கான ஏற்பாடுகளையும் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். பழையன கழித்தாக வேண்டும், புதியன புகுந்தாக வேண்டும். அதற்கு நீங்கள் வழிசெய்ய வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:அரசு மருத்துவமனைகள் சாக்கடையை விட மோசமாக உள்ளது - கமல்ஹாசன்