தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போட்டியில் வென்ற காளையின் காலை வெட்டிய மர்ம கும்பல் - கண்ணீருடன் உரிமையாளர் பேட்டி... - all district news in tamil

வேலூர் அருகே எருது விடும் போட்டியில் முதல் பரிசு வென்ற காளை மாட்டை கத்தியால் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மாட்டின் உரிமையாளர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

போட்டியில் வென்ற காளையில் காலை வெட்டிய மர்ம கும்பல்
போட்டியில் வென்ற காளையில் காலை வெட்டிய மர்ம கும்பல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 7:21 PM IST

மாட்டை வளர்த்தவர் கண்ணீருடன் அளித்த பேட்டி

வேலூர்:வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கோட்டை காலணி பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவர் தனது காளை மாட்டிற்கு "பவானி எக்ஸ்பிரஸ்" என்று பெயர் சூட்டி வளர்த்து வருகிறார். இந்த காளை மாடு சுற்றுவட்டார மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் நடைபெறும் எருது விடும் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகள் வென்று வந்துள்ளது.

அந்தவகையில், நேற்று (அக்.29) ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற எருது விடும் போட்டியில் பங்கேற்று முதல் பரிசு வென்றுள்ளது. பின்னர் வெற்றி பெற்ற தனது "பவானி எக்ஸ்பிரஸ்" என்கிற காளையை, வழக்கம் போல் தோட்டத்தில் கட்டி வைத்துள்ளார் மாட்டின் உரிமையாளர் சிவா. இந்த நிலையில் நேற்று இரவு (அக்.29) தோட்டத்திற்குள் புகுந்த மர்ம கும்பல், மாட்டின் கால்களைக் கத்தியால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று அதிகாலை (அக்.30) மாட்டைப் பார்ப்பதற்காகச் சிவா சென்ற போது, தனது காளை மாடு ரத்த வெள்ளத்தில் நின்று கொண்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதனையடுத்து காளை மாட்டின் உரிமையாளர் சிவா, உடனடியாக பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் காளை மாட்டின் காலில் மர்ம கும்பல் கத்தியால் வெட்டியது குறித்து புகார் அளித்துள்ளார்.

அதன்பின், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், காயம் அடைந்த காளை மாட்டை மீட்டு, சிகிச்சைக்காக வேலூரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து, காளை மாட்டின் உரிமையாளர் சிவாவின் மனைவி பவானி கூறுகையில், தனது காளை மாடு போட்டியில் வெற்றி பெற்ற ஆத்திரத்தில் தான் மர்ம கும்பல் தாக்கியுள்ளதாகவும், மாட்டைத் தாக்கியவர்கள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.

வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறும் பல எருது விடும் போட்டிகளில் பங்கேற்று, பல பரிசுகளை வென்ற "பவானி எக்ஸ்பிரஸ்" என்கிற காளை மாட்டின் காலை மர்ம கும்பல் தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: போன் செய்தால் வாடிக்கையாளர் இடத்திலே கஞ்சா டோர் டெலிவிரி - சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details