வேலூர் :அரசு கால்நடை மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தனது கன்றுக் குட்டி உயிரிழந்ததாக கூறி இறந்த கன்றுக் குட்டியை தூக்கிக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் சலவன்பேட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). திருமணமாகாத இவர், தனது தாயுடன் ஓல்டு டவுன் பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கால்நடைகளை வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் மணிகண்டனின் பண்னையில் இருந்த கன்றுக் குட்டிக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாகவும், அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்கு காட்டிய போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இறந்த கன்றுக் குட்டியின் சடலத்துடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மணிகண்டன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியது, "நான் வளர்த்து வரும் 8 கால்நடைகளில் ஒரு பசு கடந்த 5 நாட்களுக்கு முன்பு கன்று ஈன்றது.
பிறந்தது முதலே இந்த கன்றுக் குட்டிக்கு தொப்புள் கொடி அருகே புண் இருந்தது. அதற்கு சிகிச்சை அளிப்பதற்காக கன்றுக் குட்டியை கடந்த சனிக்கிழமை வேலூர் அரசு கால்நடை மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் வைத்து அழைத்துச் சென்று இருந்தேன். அங்கு கன்றுக் குட்டியை பரிசோதித்த மருத்துவர் சுப்பிரமணியன், அதற்கு செலுத்துவதற்காக ஊசி மருந்தினை பரிந்துரை செய்தார்.
அதன்பேரில், கன்றுக் குட்டிக்கு மருத்துவ உதவியாளர் ஒருவர் ஊசி மருந்தினை செலுத்தினார். தொடர்ந்து, கன்றுக் குட்டியை வீட்டிற்கு கொண்டு சென்ற ஒரு மணி நேரத்திற்குள் உயிரிழந்துவிட்டது. உடனடியாக இறந்த கன்றுக் குட்டியுடன் அரசு கால்நடை மருத்துவமனைக்கு சென்று நடந்ததை கூறினேன்.