வேலூர்தொரப்பாடி காமராஜர் தெருவைச் சேர்ந்த பிரியா என்பவருக்கும் சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் ரவி என்பவருக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் ஆகியது. தற்போது இவர்களுக்கு 6 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில், கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பிரியா தனது குழந்தையுடன் தாயார் வீட்டில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் கணவரைப் பிரிந்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜீவனாம்சம் கேட்டு வேலூர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார். இதற்கிடையே, நேற்று (ஜூலை3) மாலை தனது குழந்தைக்கு காய்ச்சலாக உள்ளதால் வீட்டில் உறங்க வைத்துவிட்டு மருந்து வாங்க சென்றுள்ளார்,பிரியா.
அப்போது பிரியாவின் கணவர் ரவி உட்பட 4 பேர் கொண்ட முகக்கவசம் அணிந்த கும்பல் பிரியாவின் தாயை சரமாரியாகத் தாக்கிவிட்டு உறங்கிக்கொண்டிருந்த 6 வயது பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு இருசக்கர வாகனம் மற்றும் காரில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பிரியா, இதுதொடர்பாக பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் பாகாயம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.