வேலூர்:அணைக்கட்டு தாலுகா பீஞ்சமந்தை மலையில் தமிழ்நாடு எஸ்டி மலையாளி பேரவையின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று (மார்ச்.04) நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தாமேதரன், பொருளாளர் வேலு முன்னிலை வகித்தனர்.
இதில் மலையாளி பேரவை சங்கத்தின் மாநிலத் தலைவர் வரதராஜி, பொதுசெயலாளர் மோகன், மாநில பொருளாளர் வெள்ளையன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்காளாக பங்கேற்று மலைவாழ் மக்களின் உரிமைகள், சட்டங்கள், அவர்கள் நலன் சார்ந்த திட்டங்கள், அதில் எவ்வாறு பயன்பெறுவது என விளக்கம் அளித்து பேசினார்.
கூட்டத்தில் தொடர்ந்து பேசியதில், 'முத்துகுமரன் அடிவாரத்தில் இருந்து பீஞ்சமந்தை மலைவரை தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பாக டெண்டர் விட்டும் இதுவரை சாலை அமைக்கும் பணியினை துவங்கவில்லை; எனவே இதனை விரைவாக தொடங்க வேண்டும் எனவும்; தாமதம் ஆகும் பட்சத்தில் வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன மாபெரும் ஆர்பாட்டம் நடத்தப்படும் எனவும் கூறினார்.
பீஞ்சமந்தை ஊராட்சியில் 40க்கும் மேற்பட்ட குட்கிராமங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிப்பதால் அவர்களின் நிர்வாக நலனை கருதியும் பீஞ்சமந்தை ஊராட்சியை பிரிந்து தேந்தூர், அல்லேரியை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சிகள் உருவாக்கி 3 ஊராட்சிகளாகப் பிரிக்க வேண்டும் எனவும், மலைவாழ் மக்களுக்கு வழங்கப்படும் வன உரிமை பட்டாக்களை விரைந்து வழங்க வேண்டும் என்றும்; ஜார்தான்கொல்லை முதல் துத்திக்காடு வரை தார்சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.