வேலூர்: காட்பாடி அடுத்த மதிமண்டலம் தாதிரெட்டிபள்ளியில் உள்ள பெரிய ஏரியில் ஆந்திரா - தமிழ்நாட்டை இணைக்கும் சாலை அமைக்கும் பணிக்காக தாதிரெட்டிபள்ளியில் உள்ள ஏரியிலிருந்து மண் எடுக்க குஜராத்தை சேர்ந்த மான்டிகார்லோ என்ற தனியார் நிறுவன ஒப்பந்ததாரருக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர்கள் அந்த ஏரியில் அரசு நிர்ணயத்த ஒரு மீட்டர் அளவை விட ஐந்து மீட்டர் முதல் ஆறு மீட்டர் அளவிற்கு கிராவல் மண்ணை இரவு, பகலுமாக கடந்த நான்கு மாதமாக அள்ளி வருவதாக கூறப்படுகிறது. இதனால் கிராமத்தை சுற்றியுள்ள மக்களின் நீர் ஆதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், அதே ஏரியில் கார்த்தி என்பவர் மீன் பண்ணை வைக்க ஜிஎஸ்டி உட்பட 4 லட்ச ரூபாய் செலவு செய்து மீன் குஞ்சுகளை ஏரியில் வளர்க்க குத்தகை எடுத்துள்ளார். இவர்கள் இவ்வாறு மண்ணை எடுப்பதால் ஏரியில் உள்ள மீன்கள் அடிக்கடி செத்து மிதப்பதாகவும், மேலும் இவர்கள் எடுக்கும் பள்ளத்தில் மீன்கள் புதைந்து கிடப்பதாகவும் கார்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.