வேலூர்:வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் வாழும் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட அதற்கான தேவைகளை, ஊராட்சி மன்றத் தலைவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், வேலூர் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூலை 25) நடைபெற்றது.
இந்த கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும், இக்கூட்டத்தில் தங்களது கோரிக்கைகள் குறித்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் பேசுகையில், வேப்பங்குப்பம் ஊராட்சியில் மக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை அகற்ற பல முறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் உடனடியாக மதுக்கடையை அகற்ற வேண்டும் என கூறினர்.
மேலும், ஏரிகளை தூர்வாரி விவசாயிகள் பயன் பெறும் வகையில், வழிவகை செய்ய வேண்டுமென கூறினர். இதேபோல் சேனூரிலும் பள்ளி அருகாமையில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் எனவும், கிராமப்புறங்களில் முழுவதுமாக மதுக்கடைகளை மூட வேண்டுமென பெரும்பாலான தலைவர்கள் வலியுறுத்தி கோரிக்கை வைத்து பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில் பேசிய ஊராட்சி மன்றத் தலைவர்கள், கிராமங்களுக்குத் தேவையான சாலை வசதி, குடிநீர், மின்சாரம், தெருவிளக்கு, இடுகாடு உள்ளிட்ட பல்வேறு விதமான கோரிக்கைகளை முன் வைத்தனர்.