உலகம் முழுவதும் இன்று(16/06/2019) தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு குழந்தையை வளர்ப்பதில் தாயின் பங்களிப்பு எவ்வளவு உள்ளதோ அதைவிட ஒரு மடங்கு கூடுதலாகவே தந்தையின் பங்களிப்பு இருக்கும்.
வேலூரில் தன்னைப் பெற்றெடுத்த தாய் தந்தைக்கு கோயில் கட்டி, ஒருவர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். வேலூர் மாவட்டம் சலவன்பேட்டை செங்காநத்தம் ரோடு பாரதியார் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தன் தாய் தந்தைக்கு கோயில் கட்டி பெருமை சேர்த்துள்ளார். இவரது தந்தை வெள்ளை நாயக்கர், தாய் ஜெகதாம்பாள். தந்தை இவருக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும், சிறந்த நண்பனாகவும், சிறந்த ஆசிரியராகவும் விளங்கியுள்ளார்.
தாய் ஜெகதாம்பாள் தனது இளமைப் பருவம் முதல் கடினமாக உழைத்து தனது குடும்பத்தை வழிநடத்தி வந்துள்ளார்.
தனது இளமைப் பருவத்தில் பெற்றோர்களின் பாசத்தையும் தியாகத்தையும் உணராத ராமச்சந்திரன், அவர்களது மறைவுக்குப் பிறகு மிக உயரிய அளவில் மரியாதை செய்ய வேண்டும் என்று எண்ணியுள்ளார்.இந்த சூழ்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் வெள்ளை நாயக்கர் காலமானார். கணவனை இழந்து வாடிய ஜெகதாம்பாளும் சில காலத்தில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து பாரதியார் நகரில் தனது வீடு அருகில் தனக்கிருந்த சொந்த நிலத்தில் தாய் ஜெகதாம்பாள், தந்தை வெள்ளை நாயக்கர் ஆகிய இரண்டு பேருக்கும் ராமச்சந்திரன் கோயில் எழுப்பியுள்ளார்.
இரண்டு பேரின் உடலையும் புதைத்து, அதன்மேல் இரண்டு பேருக்கும் சுமார் 6 அடி உயரம் உள்ள வெண்கல சிலையை எழுப்பியுள்ளார். ஒவ்வொரு சிலையும் தலா ரூ 7 லட்சம் மதிப்புள்ளது . வெறும் சிலைகளை மட்டும் வைக்காமல் கோயிலைப் போன்று கருவறை அமைத்து தந்தை தாய் சிலைகளுக்கு முன்பு சிவன் சிலையும் அமைத்துள்ளார்.