வேலூர்:தோட்டப்பாளையம் பகுதியில் பிரபலமான துணிக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் வாகனங்கள் நிறுத்தும் இடமானது கீழ் தளத்தில் இயங்கி வருகிறது. அதன்படி, வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களை கீழே நிறுத்தி விட்டு துணி எடுப்பதற்காக கடைக்குள் சென்று வருவர்.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலூர், சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஷாயில் துணி எடுப்பதற்காக வந்து உள்ளார். அப்போது அவருடைய யமஹா வாகனத்தை கீழ் தளத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு, துணி வாங்கிக் கொண்டு வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
இது குறித்து துணிக்கடையின் பாதுகாவலரிடம் கேட்டபோது, “தாங்கள் இதற்கு பொறுப்பல்ல உங்கள் வாகனத்திற்கு நீங்கள்தான் பொறுப்பு அதை நீங்கள்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” எனக் கூறி உள்ளார். இதனால் ஷாயில் வடக்கு காவல் நிலையத்தில் வாகன திருட்டு குறித்து புகார் அளித்தார்.