வேலூர்: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரி (63) என்பவர் நேற்று (மே 3) ரயிலுக்காக வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள நடை மேடை எண் ஒன்றில் காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவரிடம் கைக்குழந்தையுடன் வந்த பெண் ஒருவர், தனது 6 மாத பெண் குழந்தையை கொடுத்து விட்டு சிறிது நேரம் பார்த்துக் கொள்ளும் படியும், ஐந்து நிமிடத்தில் வந்து விடுவதாகவும் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
ஆனால், நீண்ட நேரம் ஆகியும் குழந்தையை கொடுத்த பெண் வராததால் சந்தேகம் அடைந்த சுந்தரி காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள இருப்புப்பாதை காவல் நிலையத்தில் குழந்தையை ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.
அதில், சிறிது நேரம் நடைமேடையை வலம் வரும் அந்தப் பெண், ஆறு மாத பெண் குழந்தையை மூதாட்டி சுந்தரியிடம் ஒப்படைத்துவிட்டு, பின்னர் வெளியில் காத்துக் கொண்டிருந்த ஒருவர் மற்றும் இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வேக வேகமாக ஆட்டோவில் ஏறிச் சென்றது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து காட்பாடி இருப்பு பாதை காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குழந்தையை விட்டுச் சென்ற பெண் மற்றும் அவர் ஏறிச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேநேரம், தற்போது ஆறு மாத குழந்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:போத்தனூர் ரயில் நிலையத்தின் பராமரிப்புப் பணி - ரயில் சேவைகளில் மாற்றம்!