முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் தன்னை காணொலி வாயிலாக குடும்பத்தாருடன் பேச சிறைத்துறை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நவம்பர் 23ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இந்நிலையில் முருகன் மீது பாகாயம் காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் முருகனை சிறை சட்டதிட்டத்தின் அடிப்படையில் சிறைக்காவலர் ஒருவர் தொடர்ச்சியாக கேமிரா மூலம் வீடியோ எடுத்து வந்தார்.
இன்று காலை முருகன் அறையில் உள்ள மற்றொரு ஆயுள் தண்டனை கைதி குப்பை தொட்டியில் ஏதோ ஒரு பொருளை வீசியுள்ளார். இதை கவனித்த சிறைக்காவலர், சிறை அலுவலரிடம் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் சோதனை செய்யவதற்காக பெண் சிறைக் காவலர்கள் சிலர் முருகனின் அறைக்குச் சென்றுள்ளனர். அப்போது நிர்வாணமாக இருந்த முருகன் அறையில் இருந்த சிலப் பொருட்களை எடுத்து பெண் காவலர்கள் மீது வீசியுள்ளார்.