தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

103 வயது முதியவருக்கு காலில் அறுவை சிகிச்சை: வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை!

வேலூரில் 103 வயதான முதியவருக்கு அறுவை சிகிச்சை மூலம் காலை அகற்றி, வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்தனா்.

103 வயதான முதியவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்து வேலூர் அரசு மருத்துவமனை சாதனை
103 வயதான முதியவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்து வேலூர் அரசு மருத்துவமனை சாதனை

By

Published : May 25, 2023, 11:32 AM IST

வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா் முனுசாமி. 103 வயதான இவர் தனது 100 வயது வரை விவசாயம் செய்து வந்தாா். கடந்த மாதம் அவரது வலது காலில் ரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட்டு கிருமி தொற்றால் மோசமடைந்து உள்ளது. இவரது வலதுகால் முட்டி வரை அழுகிய நிலையில் இருந்து உள்ளது. இதனால் அவரது உடல் நலம் நாளுக்கு நாள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்து உள்ளது.

இதனால் 5 தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அணுகினாா். ஆனால் தனியார் மருத்துவமனைகளில், அதிகப் படியான செலவு மற்றும் வயது முதிா்வு காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்க தனியாா் மருத்துவமனைகள் முன்வரவில்லை. இந்த நிலையில், முதியவர் முனுசாமி வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நாடினாா்.

ஆனால் அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையை அடுத்து, ரத்த குழாய் அடைப்பைச் சரி செய்ய அவரது வலதுகால் முட்டி வரை அழுகிய நிலையில் உள்ள காலை அறுவை சிகிச்சை செய்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு, முதியோா் நலப்பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, ரத்த நாளப் பிரிவு, மயக்கவியல் துறை ஆகிய 5 பிரிவுகளைச் சோ்ந்த மருத்துவா்கள் இணைந்து கடந்த மே 8 ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் முனுசாமியின் அழுகிய வலது காலை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றினா்.

இதன் மூலம் தற்போது அவா் பூரணமாக குணம் அடைந்து உடல் நலம் தேறி வருவதாக வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். பாப்பாத்தி கூறி உள்ளார். மேலும் அவா் கூறியதாவது, "முனுசாமி 103 வயதானவா் என்பதால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதில் பல சிக்கல்கள் இருந்தன. மயக்க மருந்து செலுத்தும் போதோ அல்லது அறுவை சிகிச்சையின் போதோ அவா் இறக்க நேரிடலாம் என்பதால், இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு ஏற்கனவே எடுத்துக் கூறப்பட்டது.

அவா்கள் ஒப்புக் கொண்டதை அடுத்து முனுசாமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவா் நல்ல முறையில் குணம் அடைந்து உடல் நலம் தேறி உள்ளாா். அவரது அகற்றப்பட்ட காலுக்கு மாற்றாக செயற்கை கால் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அவா் நடமாட முடியும்" என்றாா்.

வேலூா் அரசு மருத்துவா்களுக்கு முதியவா் முனுசாமி நன்றி தெரிவித்தாா். அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்த துறை மருத்துவா்கள் ராஜவேலு, ஸ்ரீதா், அரி, கோமதி, பாலபாஸ்கா், பத்மநாபன், டேனிராஜா, ஜெகதீஷ், பிஜின் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

இதையும் படிங்க:சொத்துக்களை விற்று பழங்குடி மக்களுக்கு வீடு.. ஊர் போற்றும் உன்னத மனிதர் ஜோஸ்வா!

ABOUT THE AUTHOR

...view details