தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் ஆக்சிஜன் சப்ளையின்றி 7 பேர் உயிரிழப்பு? - vellore

வேலூர்: அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறாலும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் வராததாலும் 7 நோயாளிகள் உயிரிழந்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஃப்டச்
டச்

By

Published : Apr 20, 2021, 2:56 AM IST

வேலூர் அடுத்த அடுக்கம்பாறையில் அமைந்துள்ளது வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இங்கு கரோனா நோயாளிகளுக்கென அமைக்கப்பட்ட 360 படுக்கைகளை கொண்ட கரோனா சிறப்பு வார்டு உள்ளது. இதில் தற்போதைக்கு 85க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (ஏப்ரல். 19) மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோகம் சீராக இல்லாமல் தடைபட்டதால் கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் மற்றும் பொது வார்டில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் என மொத்தம் 7 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக நோயாளிகளின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையால் கரோனா வார்டில் இருந்த சில நோயாளிகள் வேலூர் பழைய அரசு மருத்துவமனை மற்றும் வாலாஜா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதனையடுத்து வாகனங்களில் கொண்டுவரப்பட்ட 42க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்களை வார்டுகளில் பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் டேங்கில் ஏற்பட்ட பழுதையும் சரிசெய்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மருத்துவக் கல்வி துறை இயக்குனர் நாராயண பாபு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்து 7 பேர் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.

இதேபோல் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி அடுக்கம்பாறை மருத்துவமனையிலேயே தூய்மை பணியாளராக பணியாற்றும் கலைச்செல்வி(42) என்பவரும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி களம்பூரை சேர்ந்த ஜெயமுருகன்(36) ஆகிய இருவரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சையில் இருக்கும்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து உயிரிழந்தவர்களின் உறவினர்களும், மருத்துவமனை மாற்றப்பட்ட நோயாளிகளின் உறவினர்களும் கூறுகையில், மருத்துவமனையில் நேற்று(ஏப்ரல். 19.) மதியம் 2.00 மணியில் இருந்தே ஆக்சிஜன் பிரச்னை இருந்தது. இது குறித்து தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மாறாக ஆம்புலன்சிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்து சென்று சிகிச்சைக்காக கொடுத்தோம்.

உயிரிழந்த ராஜேஸ்வரியின் உறவினர்கள் கூறுகையில், திடீரென மருத்துவமனையில் ஆக்சிஜன் அளவு குறைந்துவிட்டது. இதனால் அடுத்தடுத்து 3 பேர் ஒரே நேரத்தில் உயிரிழந்துவிட்டனர். ஆக்சிஜன் சரிசெய்ய மருத்துவர்களிடம் சொன்னால் ஆட்கள் இல்லை என கூறிவிட்டனர். இவ்வளவு பெரிய மருத்துவமனையில் ஆக்சிஜன் பிரச்னை என்றால் அதை சரி செய்ய வேண்டாமா? இது குறித்து மருத்துவர்களை கேட்டால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது ஆக்சிஜனை சரிசெய்தால் பார்ப்போம் என கூறிவிட்டனர்.

மேலும், பொது வார்டில் உயிரிழந்த கண்ணமங்களத்தை சேர்ந்த ராஜேந்திரனின்(68) உறவினர்கள் பேசுகையில், ”சுவாச பிரச்னை, நுரையீரல் பாதிப்பால் கடந்த 5 நாள்களாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். கரோனா தொற்று இல்லை. ஆனால் 3 மணி நேரமாக ஆக்சிஜன் வரவில்லை. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. வெளியில் வந்து ஆக்சிஜன் சிலிண்டரை பலரிடம் கேட்டோம் யாருமே உதவி செய்யவில்லை. செவிலியர்களும் அலட்சியமாக இருந்துவிட்டார்கள். இதனால்தான் அவர் உயிரிழந்துவிட்டார்” என்று கூறினார்.

உயிரிழந்த ராஜேந்திரனின் மகள் பேசுகையில், என்னோட அப்பா உயிர் போனதற்கு காரணம் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாததுதான். அவசர சிகிச்சை பிரிவில்கூட ஆக்சிஜன் சிலிண்டர் இல்லை என்று கூறிவிட்டனர். எனது அப்பா இறந்த பிறகு சிலிண்டரை கொண்டுவருகிறார்கள்” என்றார்.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வி, மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர் மணிவண்ணண் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் 7 பேர் உயிரிழப்பிற்கான காரணம் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 பேர் உயிரிழந்தனர் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவிவருகிறது. அது உண்மை கிடையாது. 7 பேரின் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் அல்ல. உயிரிழந்த 7 பேரில் 4 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களில் 3 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தனர்.

அவர்களுக்கு கிருமி தொற்று, வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட வேறு நோய்களுக்கு பிற வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. அவர்கள் சிறிதுநேர இடைவெளியில் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அதைத்தவிர 3 பேர் இதய பிரச்னை, சர்க்கரை, வலிப்பு நோய் உள்ளிட்டவற்றுக்காக பொதுவார்டில் சிகிச்சையில் இருந்தனர். அவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனையில், ஆக்சிஜன் கொள்கலன் பராமரிப்பு பணி நேற்று நடைபெற்றுவந்தது. பராமரிப்பு நடைபெற்ற நாளில் 7 பேர் உயிரிழந்ததால் இந்த சம்பவம் பெரிதாக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் அவர்களின் இறப்பை ஏற்க முடியாமல் ஆக்சிஜன் பற்றாக்குறை என்று கூறியிருப்பார்கள். ஆனால், அவர்களின் இறப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் அல்ல

மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்பட்ட 59 பேர், பிற வார்டுகளில் 62 பேர் என்று மொத்தம் 121 பேருக்கு ஆக்சிஜன் பொருத்தப்பட்டிருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறை என்றால் 121 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் மற்றும் 56 ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளன. அதை தவிர கூடுதலாக ரூ.35 லட்சம் மதிப்பில் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கிடையாது. 7 பேரும் ஆக்சிஜன் மூலம் சிகிச்சை பெற்று வந்தார்களா என்பது விசாரணைக்கு பின்னர் தெரியவரும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details