வேலூர்: வேலூரில் கடந்த 27ஆம் தேதி இஸ்லாமிய இளம்பெண்கள் சிலர் தங்களது ஆண் நண்பர்களுடன் வேலூர் கோட்டையைச் சுற்றிப் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சில நபர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி, ஹிஜாபை கழற்றிவிட்டு செல்லும்படி கூறியுள்ளனர். அதற்கு இளம்பெண்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அவர்களின் அனுமதியின்றி வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ நேற்று (மார்ச்.29) சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், வேலூர் கோட்டையில் அத்துமீறி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டவர்கள், அதனை பகிர்ந்தவர்கள் என 7 பேரை வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் இன்று கைது செய்துள்ளனர். சர்ச்சைக்குள்ளான வீடியோவையும் சமூக வலைதளங்களில் இருந்து போலீசார் நீக்கியுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், "பொது இடங்களில் யார் வந்து தனிமனித உரிமைகளின் மீது பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வீடியோ எடுத்து மிரட்டினாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, இந்த வீடியோவை யாரும் பயன்படுத்தவோ, பரப்பவோ கூடாது. இந்த வீடியோவை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வேலூர் கோட்டையில் காவல் துறையினர் 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள், இப்போது அங்கு ஒரு காவல் உதவி மையமும் திறக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
வீடியோ எடுக்கப்பட்டதற்கான நோக்கம் என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "தற்போது புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது, விசாரணை முடிவில்தான் அதைப்பற்றி தெரியவரும்" என்றார்.