வேலூர்:கள்ளச்சாராயத்தை தடுக்க மேற்கொள்ளப்படும் தேடுதல் கண்காணிப்பின் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 25 முதல் ஜூன் 19ஆம் தேதி வரை மொத்தம் 269 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதில், தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி வந்ததாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்ததில் 22 பேர் உயிரிழந்ததாக கருதப்படும் சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளசாராயம் காய்ச்சுவது மற்றும் விற்பனை செய்வது தொடர்பானவற்றை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில்,வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக என்.மணிவண்ணன் கடந்த மே 25 ஆம் தேதி பொறுப்பேற்றார்.அவர் பொறுப்பேற்ற நாள் முதல் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறார்.அதேபோன்று கள்ளச்சாராயத்தை விற்பனை செய்பவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்கள் முடக்கப்படும்.மேலும் அவர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, மாவட்டத்திலுள்ள மலைப்பகுதிகளில் மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை காவலர்கள், தனிப்படை காவலர்கள் மேலும் உள்ளூர் காவலர்களும் தீவிர தேடுதல் பணி மேற்கொண்டு மலைப்பகுதிகளில் பதுக்கப்பட்டுள்ள கள்ளச்சாராயம், சாராய ஊறல், சாராயம் தயாரிக்க பயன்படும் பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர,சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் தயாரிப்பவர்களையும், மேலும் அதனை கடத்தி விற்பவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.