தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் சிறார் பாதுகாப்பு இல்லத்திலிருந்து 7 பேர் தப்பியோட்டம் - 3வது முறையாக தப்பியோடிய சிறார்கள்! - வேலூர் செய்தி

வேலூரில் உள்ள அரசினர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து 7 சிறார் கைதிகள் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் இருவர் பிடிபட்ட நிலையில், மீதமுள்ள ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

juvenile
வேலூர்

By

Published : Apr 28, 2023, 3:19 PM IST

வேலூர்: வேலூர் காகிதப்பட்டறை ஆற்காடு சாலையில், சமூகப் பாதுகாப்புத் துறையின்கீழ் செயல்படும் அரசினர் பாதுகாப்பு இல்லம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட தண்டனை விதிக்கப்பட்ட 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் 25ஆம் தேதி, திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சென்னையைச் சேர்ந்த சிறார் ஒருவரை, சென்னையில் உள்ள பாதுகாப்பு இல்லத்திற்கு மாற்ற சமூக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முயற்சித்தனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த சிறுவர் பாதுகாப்பு இல்லம் கட்டிய சுவர் மீது ஏறி நின்று, நீண்ட அட்டகாசம் செய்தார். பின்னர், வேலூர் இளஞ்சிறார் நீதிமன்ற குழும நீதிபதி பத்மகுமாரி பாதுகாப்பு இல்லத்திற்கு நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து சிறுவர் கீழே இறங்கினார்.

இதனிடையே கடந்த மார்ச் 27ஆம் தேதி, சென்னையைச் சேர்ந்த அந்த இளம் சிறார் மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேர், பாதுகாப்பு இல்ல ஊழியர்களைத் தாக்கிவிட்டு தப்பியோடினர். இதனால், பாதுகாப்பு இல்லத்தின் பாதுகாப்பாளர்கள், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனக் கோரி நள்ளிரவில் மாவட்ட ஆட்சியர் வீட்டின் முன்பு குவிந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. சிறார்கள் தப்பியோடிய சம்பவம் வேலூரில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேற்று(ஏப்.27) இரவு வேலூரில் உள்ள அரசினர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து 7 சிறார் கைதிகள் கழிவறையின் ஜன்னலை உடைத்து தப்பியோடியுள்ளனர். ஜன்னலை உடைத்து, போர்வையை கயிறாக பயன்படுத்தி ஒருவர் மீது ஒருவர் ஏறி தப்பி ஓடி உள்ளனர். இதனை அறிந்த பாதுகாப்பு இல்லப் பாதுகாவலர்கள் மற்றும் காவல்துறையினர், அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதில் இரண்டு பேர் பெருமுகை அருகே பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள ஐந்து பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களில் மூன்றாவது முறையாக சிறார் கைதிகள் தப்பியோடியுள்ளனர். கடந்த இரண்டு முறையும் சிறார்கள் தப்பியோடியபோது, காவல்துறையினர் அவர்களை தேடிப்பிடித்து வழக்குப்பதிவு செய்து மீண்டும் பாதுகாப்பு இல்லத்தில் அடைத்தனர்.

இதையும் படிங்க: வேலூர் சிறார் பாதுகாப்பு இல்லத்தில் 6 பேர் தப்பியோட்டம்.. அச்சத்தில் பாதுகாவலர்கள் கலெக்டர் வீடு முன்பு தஞ்சம்!

இதையும் படிங்க:Mudumalai Elephant Attack: முதுமலையில் வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் பலி!

இதையும் படிங்க:நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு முயற்சி - வழக்கறிஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details