வேலூர்:காட்பாடி அடுத்த பொன்னை பகுதியில் வெளிமாநிலத்திற்கு கடத்த இருந்த 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களுக்காக வழங்கப்படும் ரேஷன் அரிசி, பல்வேறு இடங்களில் இருந்து வெளியே மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக அடிக்கடி வரும் புகார்களைத் தொடர்ந்து காவல் துறையினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி கடத்தலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்தும், எடுத்துச் செல்லப்பட்ட அரிசியை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இடைத்தரகர்கள் மூலம் ரேஷன் அரிசியை அண்டை மாநிலமான ஆந்திராவிற்கு அவ்வப்போது கடத்தப்படுவதாக வரும் புகார்களைத் தொடர்ந்து, பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று வேலூர் மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் தலைமையில் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை பகுதியில் சித்தூர் செல்லும் சாலையில் சாலை ஓரமாக கேட்பாரற்று 13 மூட்டைகள் கிடந்தன.
இந்த அரிசி மூட்டைகள் சில மணி நேரத்திற்குள் வாகனங்களில் ஏற்ற தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் ஆந்திர மாநிலத்திற்கு கடத்த 13 மூட்டைகளில் இருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் திருவலம் நுகர் பாதுகாப்பு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.