நாடு முழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் பட்டப்படிப்பில் சேர்வதற்காக ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
அதன்படி, செப்.1ஆம் தேதி முதல் செப்.6ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஜேஇஇ தேர்வுகள் நடைபெறுகின்றன. இன்று தொடங்கிய இந்தத் தேர்வில் பங்கேற்பதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் இடத்தில் ஜேஇஇ தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வெழுதினர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய முதல்வேளை தேர்வில் 168 பேர் தேர்வு எழுதுவதாக இருந்தது. ஆனால் அதில் 98 மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர். அதேபோல், இரண்டாவதாக மதியம் 2.30 மணிக்கு தொடங்கிய தேர்வில் 234 பேர் தேர்வு எழுதுவதாக இருந்தது. ஆனால் அதில் 115 பேர் பங்கேற்றனர். அதன்படி, வேலூர் தேர்வு மையத்தில் மட்டும் 50 விழுக்காட்டிற்கும் மேலாக மாணவர்கள் தேர்வில் பங்கேற்காதது தெரியவந்துள்ளது.
பொது போக்குவரத்து இன்று முதல் இயங்கினாலும் அவை அனைத்தும் மாவட்டங்களுக்கு உள்ளேயே செயல்படுவதால், குறித்த நேரத்தில் தேர்வு எழுதும் மையத்திற்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பல மாணவர்களும் தேர்வுக்கு வரவில்லை என தெரிகிறது.
வரும் 6ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்தத் தேர்வில் ஒரு நாளைக்கு 2 பிரிவாக 173 பேர் தேர்வு எழுத உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நீட் தேர்வை கைவிடக்கோரி தலைமை நீதிபதிக்கு மாணவர்கள் கடிதம்!