"சிறுபான்மையினருக்கு மத்திய அரசு 3,900 கோடி ஒதுக்கியுள்ளது" - வேலூர் இப்ராஹிம்! வேலூர்: சிறுபான்மையின மக்களுக்காக மத்திய அரசு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, பாஜக சிறுபான்மையினர் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் இன்று (டிச.15) பொதுமக்களிடம் வழங்கினார். வேலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்த பொது மக்களுக்கும், ஒவ்வொரு வணிக அங்காடிகளுக்கும் நேரடியாகச் சென்று வழங்கி திட்டங்கள் குறித்த விவரங்களையும் அவர் எடுத்துக் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறுபான்மையின மக்களுக்குக் கணிசமான நிதியினை ஒதுக்கி வருகிறது. நடப்பு நிதி ஆண்டில் சிறுபான்மையின மக்களுக்கு 3,900 கோடி நிதியினை மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது. இதன் மூலம் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டும் வருகிறது.
மத்திய அரசு சிறுபான்மையினர் வெளிநாட்டுக்குச் சென்று கல்வி பயில நிதி உதவியும், பெண்கள் சிறு தொழில் துவங்க வங்கிக் கடனும் வழங்கப்பட்டு வருகிறது. வேலை வாய்ப்புக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டு வருகிறது. மதரஸாவில் பயிலும் மாணவர்கள் தங்களுடைய கைவினைப் பொருட்களைச் சந்தைப்படுத்தி அதன் மூலம் பொருளாதாரம் ஈட்டக்கூடிய வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒன்பதாம் வகுப்பு முதல் கல்லூரி பயிலும் வரை மாணவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற பல திட்டங்கள் சிறுபான்மையின மக்களுக்காக மத்திய அரசு வழங்கி வருகிறது. ஆனாலும் சிலர் இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜக செயல்படுவதாகத் தெரிவித்து வருவது வேதனை அளிக்கிறது" இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க:வெள்ள நிவாரண நிதி.. டோக்கன் முறையில் வழங்க எதிர்ப்பு - நீதிமன்றம் தெரிவித்தது என்ன?