வேலூர் மாவட்டம் ஆம்பூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மலா. இவர் தனது வீட்டில் வைத்திருந்த 35 சவரன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு ஆம்பூர் நேதாஜி சாலையில் உள்ள ஸ்டேட் வங்கிக்கு வந்துள்ளார். பின்னர் தனது வங்கி கணக்கில் இருந்து 45 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தான் கணக்கு வைத்துள்ள கனரா வங்கிக் கிளைக்கு சென்றுள்ளார். தான் கொண்டுவந்த 35 சவரன் தங்க நகையை கனரா வங்கியில் செலுத்த அங்கு வந்து இறங்கியுள்ளார் நிர்மலா.
ஆம்பூரில் 20 ரூபாய் நோட்டை போட்டு வழிப்பறி - கொள்ளையனுக்கு வலை - ambur
வேலூர்: ஆம்பூரில் உள்ள வங்கி முன்பு 20 ரூபாய் நோட்டை கீழே போட்டு பெண் ஒருவரை திசை திருப்பி அவரிடமிருந்த 35 சவரன் தங்க நகை மற்றும் 45 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை அடையாளம் தெரியாத நபர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அங்கு நின்றுகொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தான் வைத்திருந்த 20 ரூபாய் நோட்டை கீழே போட்டு விட்டு நிர்மலாவை திசை திருப்பியுள்ளார். தொடர்ந்து அவர் வைத்திருந்த பையை லாவகமாக அபகரித்துக்கொண்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.
பை காணாமல் போன அதிர்ச்சியில் நிலைகுலைந்து போன நிர்மலா, இதுகுறித்து ஆம்பூர் நகர காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, ஆம்பூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் குற்றவாளிக்கு போலீசார் வலை வீசியுள்ளனர். பட்டப்பகலில் வங்கி வாசலில் அரங்கேறிய இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட நிர்மலா ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் ராதாகிருஷ்ணன் என்பவரின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.