வேலூரில் கடந்த எட்டு நாட்களில் 250 கிலோ குட்கா பறிமுதல் - 10க்கும் மேற்பட்டோர் கைது! வேலூர்:கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக சிறப்பு காவல் படையினர் நடத்திய சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வந்த ரகசியத் தகவலின் பெயரில் பேர்ணாம்பட்டு அடுத்த பத்தலபள்ளி மதுவிலக்கு சோதனைச் சாவடியில் மதுவிலக்கு போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கொண்டு வந்த பேங்கில் சோதனை மேற்கொண்டபோது, சட்ட விரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் ரூ.2,00,000/- மதிப்புடைய 20 கிலோ எடை கொண்ட கஞ்சாவைப் பறிமுதல் செய்து, அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதேபோல் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற்கொள்ள முயன்றபோது காரில் வந்த இருவர் தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து போலீசார் வாகனத்தை மடக்கிப் பிடித்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. மேலும் குட்கா கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் திவாசி மற்றும் தினேஷ் ஆகிய இருவரை கைது செய்து, பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வாரகாலமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு காவல்படையினர் மாநில எல்லைப் பகுதிகளிலும், மாவட்டத்திற்கு உள்ளேயும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என அனைத்து பகுதிகளிலும், தொடர் கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டு வந்ததால் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 10 பேருக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாகவும் இதனை விரைந்து தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாவட்ட காவல் துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
வேலூரில் கடந்த எட்டு நாட்களில் நாட்களில் பல்வேறு இடங்களில் கஞ்சா சுமார் 23 கிலோ கஞ்சா மற்றும் 250 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினரின் இந்தச் செயல் பொதுமக்களிடையே வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க :கேரளா - கேரளம் என பெயர் மாற்றம்.. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!