வேலூர்:தமிழ்நாட்டில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபானக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கி வருகிறது. பல மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தாலும், மது விற்பனை குறைந்தபாடில்லை. அதேபோல், குடிமகன்கள் மதுக்கடைகளுக்கு அருகிலும், பொது இடங்களிலும் மது அருந்திவிட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருகின்றன.
அந்த வகையில், வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக் கடைகளால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. வேலூர் பழைய பேருந்து நிலையத்தையொட்டி இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்த டாஸ்மாக் கடைகளில் இரவு 10 மணிக்குப் பிறகும் விதிகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 24 மணி நேரமும் இந்த மதுக்கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால், நகரின் பல்வேறு இடங்களில் இருந்தும் குடிமகன்கள் இந்த கடைகளுக்கு வருகின்றனர்.
அதேபோல், இந்த கடைகளில் மதுபானம் வாங்குபவர்கள் கடைக்கு அருகிலேயே பொதுவெளியில் அமர்ந்து குடிக்கின்றனர். குடித்துவிட்டு காலி மதுபாட்டில்களை சாலையிலேயே விசிவிட்டுச் செல்கின்றனர். சில குடிமகன்கள் மது போதையில் அங்குள்ள வியாபாரிகளிடமும், பேருந்துக்காக வரும் பொதுமக்களிடமும் தகராறு செய்கின்றனர். நூற்றுக்கணக்கான கடைகள் இயங்கி வரும் மண்டி தெருவில், அடிக்கடி இதுபோல குடிகாரர்கள் ரகளை செய்து வருகின்றனர். இதனால், வியாபாரிகள் சிலர் மாலையில் சீக்கிரமாக கடையை மூடிவிட்டு சென்றுவிடுவதாக தெரிகிறது.
வேலூர் நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக திகழும் மண்டி தெருவில், வியாபாரிகளும் பொதுமக்களும் நீண்ட காலமாக குடிகாரர்களின் தொந்தரவை எதிர்கொண்டு வருகின்றனர். இது குறித்து அறிந்தும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யும் மதுக்கடைகளை அகற்றவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் மது அருந்துவதை முறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக வேலூர் சரக டிஐஜி முனைவர் முத்துசாமியிடம் கேட்டபோது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதையும் படிங்க: "12 டூ 10 உனக்கு; 10 டூ 12 எனக்கு" - கசம் பகுதியில் நூதன மது விற்பனை.. கண்டுகொள்ளுமா வேலூர் மாவட்ட நிர்வாகம்!