வேலூர் மாவட்டம், அமிர்தி வனப்பகுதியில் வன உயிரியல் பூங்கா உள்ளது. இதை சுற்றியுள்ள பகுதிகளில் சந்தன மரங்கள், செம்மரம் ஏராளமாகவுள்ளன. இதனால் இந்த பகுதியில் வனத்துறையினர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.
இதேபோல் இன்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சந்தன மரங்களை வெட்டியது தெரியவந்தது. சந்தன மரங்களை வெட்டிய 15பேரை சுற்றி வளைத்த போது ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதையடுத்து 14பேரை பிடித்து விசாரித்ததில், உலகநாதன் (32), மாணிக்கவேல் (21), அன்பு (18), கமலக்கண்ணன் (18), சங்கர்(24), திருப்பதி (22), பாண்டு (25), கார்த்தி (23), வில்வநாதன் (26) மற்றொரு திருப்பதி (19), அருணாச்சலம் (30), மனோகரன் (34), அன்பழகன் (30), அருள் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது.
சந்தன மரக்கடத்தல்காரர்கள் கைது இதையும் வாசிங்க : இந்திய- பசிபிக் கடல் பாதுகாப்பு: புதிய திட்டத்தை முன்மொழிந்த நரேந்திர மோடி!
மேலும் தப்பியோடியது அந்த கும்பலைச் சேர்ந்த அன்பு என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 154 கிலோ சந்தன மரக்கட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு கார்கள், நான்கு இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட முதன்மை வனப்பாதுகாவலர் சேவாசிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தற்போது தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் என்பதால் கடத்தல்காரர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். அதையொட்டி வனத்துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் அமிர்தி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது மரம் வெட்டும் சத்தம் கேட்டு அங்கே சென்றனர். அப்போது சந்தனமரம் கடத்த முயன்ற இந்த 14 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 14 பேரையும் திருப்பத்தூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளோம்" என்றார்.
இதையும் வாசிங்க : ஃபேஸ்புக்கின் தனித்துவத்தைக் காட்டுவதற்காக புதிய லோகோ அறிமுகம்!