தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் சிப்பாய் புரட்சி: பலரும் அறியாத புரட்சியின் வரலாற்று சுவடுகள் !

வேலூர் கோட்டையின் எதிரே உள்ள கல்லறையில் மறைந்து கிடக்கும் வேலூர் சிப்பாய் புரட்சியின் வரலாற்று சுவடுகளை இக்கட்டுரை தொட்டிருக்கிறது.

125th-memory-of-vellore-mutiny
1806 வேலூர் சிப்பாய் புரட்சி: பலரும் அறியாத புரட்சியின் வரலாற்று சுவடுகள்

By

Published : Jul 10, 2021, 1:07 AM IST

Updated : Jul 13, 2021, 2:37 PM IST

வேலூர்:மைசூர் பேரரசரான திப்பு சுல்தானுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே நான்கு மைசூர் போர்கள் நடைபெற்றன. 1799ஆம் ஆண்டு நடைபெற்ற கடைசி மைசூர் போரின்போது திப்பு சுல்தான் கொல்லப்படுகிறார். திப்பு ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் என்பதால், இவரது குடும்ப உறுப்பினர்களில் இருந்து மீண்டும் யாரேனும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக உருவாகிடக்கூடாது என்பதற்காக ஶ்ரீரங்கப்பட்டிணத்தில் இருந்த திப்பு சுல்தானின் குடும்ப உறுப்பினர்களோடு சேர்த்து 1,378 பேரை சிறை பிடித்து வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்கள் அடைத்து வைத்தனர்.

ஆயிரம் வீரர்களின் ஊடுருவல்

திப்பு குடும்பத்தில் இருந்த ஆண்கள், கோட்டையினுள் இருந்த பாதுஷா மஹாலிலும், பெண்கள் பேகம் மஹாலிலும் அடைத்து வைக்கப்பட்டனர். அச்சமயத்தில், மத நம்பிக்கைகளுக்கு எதிராக ஆங்கிலேயர்களிடம் பணியாற்றிய இந்திய வீரர்களிடம் காட்டப்பட்ட அடக்குமுறையும், ஆங்கிலேய - இந்திய சிப்பாய்களுக்கு இடையேயான ஊதிய வேறுபாடும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.

வேலூர் சிப்பாய் புரட்சி: பலரும் அறியாத புரட்சியின் வரலாற்று சுவடுகள்

1806, ஜூலை 10ஆம் தேதி திப்பு சுல்தானின் ஆறாவது மகளான நூருன் நிஷா பேகத்திற்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை சாதகமாக்கிக்கொண்ட இந்திய சிப்பாய்கள் ஆயிரம் பேர் திருமண நிகழ்வில் பங்கேற்பதுபோல கோட்டையினுள் நுழைந்தனர்.

அப்போது, இந்திய சிப்பாய்கள் சுபேதார் ஷேக் காதம், ஷேக் காசிம், சுபேதார் ஷேக் ஹுசைன் போன்றோர் தலைமையிலான சிப்பாய்கள் அணிவகுத்து ஆங்கிலேய அலுவலர்களை திடீரென சுட்டுக் கொன்றனர். எவ்வித தலைமையும் இன்றி தன்னெழுச்சியாக புரட்சியில் குதித்தனர் இந்திய சிப்பாய்கள்.

இதனை சற்றும் எதிர்பாராத ஆங்கிலேயர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இந்தப் புரட்சியின் போது ஆங்கிலேய படையின் வேலூர் படை தளபதியான ஜான் ஃபேன்கோர்ட் உயிரிழந்தார்.

கோட்டையில் புலிக்கொடி

தொடர்ந்து இந்திய சிப்பாய்கள் அன்று காலையில் வேலூர் கோட்டையில் பறந்து கொண்டிருந்த ஆங்கிலேய ஜாக் கொடியை இறக்கி திப்பு சுல்தானின் புலிக்கொடியை ஏற்றினர். இதனை அறிந்து தனது படையுடன் விரைந்த ஆற்காட்டின் படை தளபதி ரோல்லோ கில்லஸ்பி கோட்டையின் கதவுகளை சிறிய வகை பீரங்கியின் உதவியுடன் உடைத்து உள்ளே நுழைந்து இந்திய சிப்பாய்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார்.

திப்பு சுல்தான்

சுமார் 8 மணி நேரம் நீடித்த இந்தப் புரட்சியில் 800 இந்திய சிப்பாய்கள் கொல்லப்பட்டனர், 600 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையினர் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 15 ஆங்கிலேய அலுவலர்கள் உட்பட 135 ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து காலையில் ஏற்றப்பட்ட புலிக்கொடியை கீழே இறக்கி மீண்டும் ஆங்கிலேய ஜாக் கொடியை ஏற்றி புரட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

புரட்சியின் அடையாளம் கல்லறை

இந்த வேலூர் சிப்பாய் புரட்சியின் நினைவுகளாக இன்றளவும் வேலூரில் உள்ள முக்கிய இடம் வேலூர் கோட்டை. சிப்பாய் புரட்சி நடைபெற்ற இடம் என்பதால் நம்மில் பலர் இந்த இடத்தை நன்றாகவே நினைவில் வைத்திருப்போம். 1998ஆம் ஆண்டு வேலூர் சிப்பாய் புரட்சியினை நினைவு கூறும் விதமாக வேலூர் மக்கான் சிக்னலில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி ஒரு நினைவு தூண் ஒன்றையும் எழுப்பினார்‌.

கோட்டைக்கு எதிரே உள்ள சர்ச்

இவற்றுக்கு மத்தியில் கோட்டையின் எதிரே உள்ள கல்லறையில் வேலூர் சிப்பாய் புரட்சியின் வரலாற்று சுவடுகள் மறைந்துள்ளன. இவற்றை பலரும் அறிந்திருக்கக்கூட முடியாது. ஆம், வேலூர் சிப்பாய் புரட்சியில் இந்திய சிப்பாய்களால் கொல்லப்பட்ட ஆங்கிலேய அலுவலர்கள், சிப்பாய்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் கல்லறை இன்றளவும் வேலூரில், சிப்பாய் புரட்சியின் மற்றொரு அடையாளமாக திகழ்ந்து வருகிறது.

வேலூர் கோட்டையின் எதிரே உள்ள சிஎஸ்ஐ சென்ட்ரல் சர்ச்சின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கல்லறை சர்ச் சார்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஒரே இடத்தில் 80 பேர் அடக்கம்

வேலூர் ஆங்கிலேய படையின் படை தளபதியான கர்னல் ஃபேன்கார்ட், லெப்டினன்ட் கர்னல் ஜேம்ஸ் மெக் கெர்ராஸ், கேப்டன் வில்சன், லெப்டினன்ட் கர்னல் வின்சிப், லெப்டினன்ட் ஜாலி ,கேப்டன் மில்லர், லெப்டினன்ட் ஒ. ரெய்லி, லெப்டினன்ட் ஸ்மார்ட், லெப்டினன்ட் டிச்போர்ன், லெப்டினன்ட் எல்லி, லெப்டினன்ட் போப்பம், எஸ். எஸ். ஸ்மித் , மன், மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங், கில் போன்ற முக்கிய அதிகாரிகளின் கல்லறைகளும் இங்கு உள்ளன.

80 பேர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை

ஒரே இடத்தில் 80 பேர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை ஒன்றும் உள்ளது. இந்த கல்லறை குறித்த வரலாற்று தரவுகளை வேலூர் கோட்டை அரசு அருங்காட்சியகத்தின் ஓய்வு பெற்ற காப்பாட்சியர் காந்தியிடம் கேட்டோம்.

கல்லறை பராமரிப்பு

"வேலூர் சிப்பாய் புரட்சியில் இறந்த சில இந்திய வீரர்களை கோட்டையின் வெளியே தென்கிழக்கு மூலையில் உள்ள தர்காவின் அருகில் இருந்த பெரிய கிணற்றில் போட்டு மூடியதாக கூறப்படுகிறது. கோட்டையின் கிழக்கே அமைந்துள்ள கிரிஸ்தவ தேவாலயத்தின் வளாகத்தில் புரட்சியின்போது கொல்லப்பட்ட ஆங்கிலேயர்களின் சமாதி அதிகம் உள்ளது. புரட்சியின்போது உயிரிழந்த அலுவலர்கள், ஆங்கிலேய வீரர்கள் போன்றவர்களுடைய சடலங்களை இங்கு புதைத்து சமாதி எழுப்பி பாதுகாத்து வருகின்றனர்.

வேலூர் கோட்டை தளபதியின் கல்லறை

இதே போன்ற சமாதி ஆரணி கோட்டை, கடலூர் தேவனாம்பட்டினம் செல்லும் வழியிலும் இருந்தது. ஆனால், அவற்றை எல்லாம் பராமரிப்பின்றி விட்டுவிட்டனர். வேலூரில் உள்ள கல்லறைகள் மட்டும் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கடந்த நுற்றாண்டின் இடைப்பகுதிவரை ஆங்கிலேயர்கள் பல்வேறு பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காலனிகளாக வைத்திருந்தனர். அச்சமயம் இறந்த அலுவலர்கள், முக்கியஸ்தர்களுடைய சமாதிகளை பராமரிப்பதற்காக லண்டனில் ஒரு அமைப்பு உள்ளது என்று நான் லண்டன் சென்றிருந்த போது அறிந்தேன். ஆனால், வேலூரில் உள்ள இந்த கல்லறை அந்த அமைப்பின் பார்வைக்கு சென்றதா எனத் தெரியவில்லை" என்றார்.

இந்திய விடுதலையின் முதல் புரட்சியாக பார்க்கப்படும் 1806 வேலூர் சிப்பாய் புரட்சி நடைபெற்று இன்றுடன் 215 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் சுவாசிக்கும் சுதந்திரத்திற்காக தங்களது இன்னுயிரை நீத்த சுதந்திர போராட்ட வீரர்களுடைய வாழ்வினை நினைவு கொள்வோம்.

இதையும் படிங்க:நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி: வரலாற்றை விளக்கும் கண்காட்சி

Last Updated : Jul 13, 2021, 2:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details