திருச்சி பொன்மலை அருகே மேல கல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் காதர் உசேன். இவரது மகன் ஜாவித் உசேன் (24). இவர் இன்று மாலை இறைச்சி வாங்குவதற்காக மேல கல்கண்டார்கோட்டை கடை வீதிக்கு சென்றிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களோடு துரத்த ஆரம்பித்தனர். மர்ம நபர்கள் ஆயுதங்களோடு தாக்க வருவதைக் கண்ட ஜாவித் உசேன் மரண பீதியில் தலைதெறிக்க ஓடினார். ஜாவித் உசேனை விடாமல் அந்தக் கும்பல் விரட்டிச் சென்றது.
திருச்சியில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை
திருச்சி: முன்விரோதம் காரணமாக மர்ம நபர்களால் கடைவீதியில் 24 வயது இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அருகிலிருந்த ஆவின் பால் பூத்துக்குள் புகுந்த ஜாவித் உசேனை சரமாரியாக மர்ம நபர்கள் வெட்டினர். இதில் ஜாவித் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஜாவித் உசேனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பொன்மலை காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக ஜாவித் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
மேலும், கடைவீதியில் வாலிபர் ஒருவரை ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.