திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாச மகாலில் உலக பணத்தாள்கள் கண்காட்சி நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த கண்காட்சியில் பழமையான பணத்தாள்கள், நாணயங்கள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி புத்தூரைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் பழங்காலத்தில், முதன் முதலில் கொடுக்கப்பட்டுவந்த பஸ் டிக்கெட் விலைகளை சேகரித்து காட்சிக்கு வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் 2011ஆம் ஆண்டு முதல் பேருந்து டிக்கெட் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறேன். சுதந்திரத்திற்கு முன்பு 1945ஆம் ஆண்டுகளில் கும்பகோணத்தில் இயங்கி வந்த ஸ்ரீராம் நிவாஸ் என்ற தனியார் பஸ் நிறுவனத்தின் டிக்கெட்டுகள் முதல், தமிழகத்தில் இயக்கப்பட்ட டிவிஎஸ் நிறுவனத்தின் டிக்கெட்டுகள் வரை சேகரித்து வைத்துள்ளேன். 1920ஆம் ஆண்டு முதல் 1924 ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர் காலத்தில் இயக்கப்பட்ட அரசு பஸ்களின் டிக்கெட், 1953ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அரசு பஸ் டிக்கெட்டுகள் ஆகியவைகளையும் சேகரித்துள்ளேன்.
82,000 வகையான பஸ் டிக்கெட்டுகள் சேகரிப்பு! 1972ஆம் ஆண்டுகளில் சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் உள்ளிட்ட மன்னர்கள், பிரபலமான தலைவர்களின் பெயர்களில் பேருந்துகள் இயக்கப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் அவர்களது பெயருடன் அச்சிடப்பட்ட டிக்கெட்டுகளை பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். 1996ஆம் ஆண்டில் கும்பகோணம், விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, சென்னை உள்பட 8 கோட்டங்களாக பேருந்துகள் பிரிக்கப்பட்டு இயக்கப்பட்டது. அதோடு விரைவு போக்குவரத்துக் கழகமும் செயல்பட்டது. கோட்டம் வாரியாக அச்சிடப்பட்ட பேருந்து டிக்கெட்டுகளும் என்னிடம் உள்ளது. 2008ஆம் ஆண்டு முதல் எந்திரம் மூலம் டிக்கெட் வழங்குவது அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதல் அதிக அளவில் என்னால் டிக்கெட்டுகளை சேகரிக்க முடியவில்லை.
குறிப்பாக என்னிடம் பூஜ்ஜியம் ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டுகளும் இருந்தது. இவை அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் டிக்கெட்டுகள் ஆகும். இதற்கு பதிலாக தற்போது தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் இலவச பயண அட்டை என்று வழங்கப்படுகிறது. அதேபோல் கையால் எழுதப்பட்ட டிக்கெட்டுகளும் சேகரித்து வைத்துள்ளேன்.
எனது தாத்தா கும்பகோணத்தில் உள்ள எஸ்ஆர்விஎஸ் என்ற தனியார் பேருந்து நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்தார். அவரது ஈர்ப்பு மூலமாக டிக்கெட் சேகரிப்பில் ஈடுபட்டு தற்போது வரை 82,000 வகையான பேருந்து டிக்கெட்டுகளை சேகரித்து வைத்துள்ளேன். நான் பயின்ற திருச்சி ஜோசப் கல்லூரியில் நிர்வாக அனுமதியுடன் பெட்டி வைத்து மாணவர்களிடம் பஸ் டிக்கெட்டுகளை சேகரிக்கத் தொடங்கினேன். விரைவில் கின்னஸ் சாதனை படைக்க முயற்சி செய்து வருகிறேன்" என்று கூறினார்.