திருச்சி ஸ்ரீரங்கம் அருகே திருவானைக்கோயில் பாரதி தெருவில் ஐந்து பேர் கொண்ட கும்பல் சாலை நடுவே இளைஞர் ஒருவரை இரும்பு கம்பி, அரிவாள் கொண்டு பயங்கரமாக தாக்கியது. இந்த காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகிவருகிறது.
காதல் விவகாரம்: இளைஞர் தாக்கப்படும் வீடியோ வைரல் - இளைஞரை தாக்கும் வீடியோ
திருச்சி: காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் அரிவாளால் சரமாரியாக தாக்கப்பட்ட காணொலி சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இது குறித்து ஸ்ரீரங்கம் காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், காதல் தகராறில் இந்த கொலை வெறி தாக்குதல் சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. வெட்டுபட்டவர் திருவானைக்கோயில் திம்மராயர் சமுத்திரம் பகுதியில் வசிக்கும் கிட்டப்பா என்பவரின் மகன் மணிகண்டன் (25) என்பதும், கொத்தனார் வேலை செய்துவருவதும் தெரியவந்தது.
மேலும் மணிகண்டன் அதே பகுதியைச் சேர்ந்த சிவா என்பவரின் தங்கையை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த சிவா கோபத்தில் தன் நண்பர்களோடு சேர்ந்து மணிகண்டனை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த மணிகண்டன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடிவருகின்றனர்.