திருச்சி: ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் ஜனவரி 1ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டு நிறைவடைந்து 2024ஆம் ஆண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைக்கட்டின. தமிழகத்தில் சென்னை உட்படப் பல நகரங்களில் வானவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திருச்சியில் பல்வேறு பகுதிகளில், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் மால்களில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் மக்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என வானவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து, கோயில்கள், தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. அனைத்து கிறிஸ்தவ சபைகளிலும் நேற்று (டிச.31) இரவு 10 மணி முதல் புத்தாண்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு மக்கள் குடும்பத்துடன் கேக் வெட்டி, குழந்தைகளுடன் புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து, புத்தாண்டு கொண்டாடிய சூர்யா என்ற பெண் கூறுகையில், “மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, தூத்துக்குடி மக்கள் கடந்த ஆண்டில் சந்தித்த பாதிப்பில் இருந்து 2024ஆம் ஆண்டில் மீண்டு வரவேண்டும். அவர்கள் இந்த வருடத்தைப் புதுமையாகத் துவங்க வேண்டும்” என்று கூறினார்.